"தூக்கமே வரலப்பா , அதனாலதான் ஒரு குவார்ட்டர் அடிக்கிறேன்!" என்று சாக்கு சொல்லி தூக்கத்தை வரவழைப்பார் பலர். 'அது என்ன மாயமோ , மந்திரமோ தெரியல', அவ்வாறு குவார்ட்டர் அடிச்சு கவுந்தால் , விடியும் முன்பே , மூன்று அல்லது நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் போய் விடுகிறது. "ஏன்?" என்று நண்பனிடம் கேட்டால் , "உடம்பு நல்லா 'ரெஸ்டு எடுத்திருசிள்ள, அதனால் தான் "என்கிறான். உண்மை இல்லை என்று தெரிந்தாலும் , அவன் மனம் வருத்தப் படாமல் இருக்க வேண்டுமே என்று ஆமாம் என்று ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
கடந்த வெகு சில நாட்களாக , அப்படி குவார்டர் கோவிந்தன் முயற்சி எதுவ்மில்லாமலே , மூன்று மணிக்கெல்லாம் தூக்கம் போய்விட்டது. போய்விட்டதென்பதை விட, போக வைத்துவிட்டன. யார் தெரியுமா ? மறுபடியும் பதிவுத் தலைப்பை படியுங்கள். ஆமாம் , தெரு நாய்கள். என்ன காரணம் என்றே தெரியவில்லை , சரியாக , அதிகாலை மூன்று மணிவாக்கில் , ஒன்றன் பின் ஒன்றாக , மாறி மாறி , குலைத்து படுத்தி எடுத்தன. அதிலும் , ஒரு நாயின் குரல் நிதமும் கேட்பதால் நன்றாக பழகி விட்டது. மற்ற நாய்களெல்லாம் குலைத்து களைத்த பின்பும் , அது மட்டும் விடுவதாய் இல்லை. விடாக் கொண்டனாக நீட்டிக் கொண்டே போனது. எனக்கு மட்டும் நாய் பாஷை தெரிந்து இருந்தால், கெட்ட வார்த்தையால் அதை திட்டி ஒரு வழி பண்ணியிருக்கலாம்.
இது பண்ணும் ரகளையால் , ஆபீசுக்கு நேரத்தில் எழுந்து செல்லும் என்னைப் போன்றவனுக்கு இந்த திடீர் நாய் தொந்தரவுகள் பெரிய இம்சை அரசனாக மாறிக் கொண்டிருந்தது. பெங்களூரில் , நேரத்தில் செல்லாமல், வழக்கத்தை விட வெறும் பதினைந்து நிமிடம் தாமதம் பண்ணினாலே , அது இரண்டு மணி நேர ட்ராபிக்கில் கொண்டு விடும் ஆபத்தான நிலையில் உள்ள காலமிது. எனவே, நேரத்தில் செல்வதற்கு நான் எடுக்கும் முயற்சிக்கு , இந்த நாய் தொந்தரவு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது.
நேற்று இரவு, படுக்கச் செல்லும் முன், "கடவுளே, இன்றைக்கு , நாய் தொந்தரவு இல்லாமல் தூங்க விடப்பா! " என்று வணங்கி திரு நீரிட்டு , படுத்துக் கொண்டேன். சரியாக , அதிகாலை , இரண்டு அரை மணி அளவில் , குய்யோ முறையோ என்று இந்தியில் ஒரே சத்தம். என்னடா , நாய்கள் எல்லாம் இந்தி கற்றுக் கொண்டுவிட்டதோ என்று சந்தேகம். திடுக்கென்று எழுந்து , சன்னல் வழியாக , வீட்டின் முன் இருந்த ரோட்டைப் பார்த்தேன்.
என் வீட்டின் முன்னால் , ஒரு பிரபலமான பெரிய மருத்துவ மனை உள்ளது. அதன் வாசல் அருகே , ஒரு டூ வீலர் நின்றிருந்தது. அதில் இருந்த ஒருவனை, அந்த மருத்துவ மனையின் காவலாளிகள் , குண்டுக் கட்டாக உள்ளே கொண்டு சென்றார்கள். அந்த இரவில் அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் , மிச்சம் ஒட்டிக் கொண்டிருந்த தூக்கம் ஓடியே விட்டது. உள்ளே கொண்டு செல்லப்பட்டவன் , இந்தியில் கத்திக் கொண்டிருந்தான். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று , வீட்டு மாடியில் இருந்து, கதவை திறந்து, ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்த இரவு நேரத்தில் அர்த்தம் கெட்டத் தனமாக.
அப்போது , திடீர் என்று ரோட்டின், எதிர் திசையில் இருந்து ஒருவன் ஓடி வந்தான். அவன் அந்த டூ வீலர் அருகே , நின்று , கீழே விழுந்து கிடந்த , ஹெல்மட்டை எடுத்துக்கொண்டான். பின், சுற்றும் முற்றும் பார்த்து , ரோட்டின் ஓரத்தில் கிடந்த , ஒரு கல்லை கையில் எடுத்துக் கொண்டான். அவன் சட்டை முழுதும் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவன் நேராக நிற்க முயற்சி செய்தாலும் , ஏனோ தள்ளாடிக் கொண்டிருந்தான். கையில் கல்லுடன் , மருத்துவ மனையின் உள்ளே இருந்தவர்களைப் பார்த்து, 'ஏ டாக்டர் , மருவாதியா அவனை விடுறியா இல்லை இந்த கல்ல எடுத்து கண்ணாடிக் கதவ உடைக்கவா ' என்று இந்தியில் மிரட்டினான்.
'ஆ இப்ப தான் ஆட்டம் களை கட்டுதுப்பா' என்று , நப்பாசையுடன் , மாடியின் பால்கனியில் பார்ப்பதற்கு தோதாக நின்று கொண்டேன். சுதாரிப்பாக , என் வீட்டு லைட் எதுவும் ஒளிரச் செய்யவில்லை. அந்த கல்லுடன் இருந்த நபர் திடீர் என்று ஒரு "அபவுட் டர்ன்" அடித்து என்னைப் பார்த்தான். அய்யயோ , கதை கந்தலாகப் போகுதே, கல் நம் மீது தான் , என்று ஒரு பயம் குபுக் என்று அடியில் இருந்து எழுந்தது.
அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. என்னைப் பார்த்தவன் , திடீர் என்று ஒரு வித பீதியுடன் , வந்த வழியே ஓட ஆரம்பித்தான். அப்படியே ஓடியவன் , திரும்பி வரவே இல்லை. சில நிமிடங்களில் , அடுத்த தெருவில் இருந்த நடு நிசி நாய்கள் அவனை துரத்தும் சத்தம் மட்டும் நன்றாகக் கேட்டது .
அவன் ஏன் ஓடினான் என்று மட்டும் விளங்கவில்லை. ஒரு வேளை , வெள்ளை பனியனுடன் , அரை இருட்டில் நின்றிருந்த என்னைப் பார்த்து பேய் என்று பயந்து விட்டானோ என்னவோ.
"யார் இவர்கள், இந்த நேரம் கெட்ட நேரத்தில், ஏன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்?" , என்று என் மனம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க , சிறிது நேரத்தில் , போலிஸ் ஜீப் வந்தது. உள்ளே, சென்ற அந்த அதிகாரி, அங்கு பிடித்து வைக்கப் பட்டிருந்த , அந்த இந்தி இளைஞன் உடன் வெளியே வந்தார். அவனை, அங்கிருந்த பார்வையாளர்கள் நாற்காலியில் அமர வைத்து , விசாரிக்க , அவன் , 'சார் நான் எப்பயும் குடிக்கிறது இல்ல , இன்னைக்குதான்' என்று சத்தமாக கன்னடத்தில் சொன்னான். அதுக்கப்புறம் அவன் என்ன சொன்னான் என்று சரியாக கேட்கவில்லை. அதற்க்கு அந்த காவல் அதிகாரி, 'எல்லாம் டேசனில் பேசலாம் வா' என்று அவனை தான் கொண்டு வந்திருந்த ஜீப்பில் ஏற்றினார்.
அப்பாடா ஒரு வழியா பிரச்சினை முடிந்தது என்று, கதவை மூடிவிட்டு , திரும்பவும் கட்டிலில் வந்து படுத்தேன். ஒரு பதினைந்து நிமிடம் தான் , மீண்டும் , "டம் டும்" , என்று ஏதோ உடைக்கும் சத்தம்.
மீண்டும் , சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அங்கே நான் கண்ட காட்சி:
அந்த மருத்துவ மனை காவலாளிகள் சிலரும் , அங்கிருந்த வேறு சில நபர்களும் , அந்த குடிகார இளைஞன் விட்டுச் சென்ற அவனின் , "டூ வீலரை" , அடித்து நொறுக்கி கொண்டிருந்தார்கள். அவர்களின் நோக்கம் , எப்படியாவது , அந்த வண்டிக்கு "மாக்சிமம் டேமேஜ்" உண்டாக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிந்தது. சில ரவுடிகள், ஒருவனைத் தாக்கும் போது , "உள் காயம்" மட்டும் வருமாறு மட்டும் பார்த்து பார்த்து அடிப்பார்களே , அதுபோல் , அந்த வண்டியை நன்றாக கவனித்து விட்டு , மீண்டும் அதனை , அங்கிருந்த ஓப்பன் பார்க்கிங் இடத்தில் கொண்டு நிறுத்தி வைத்துவிட்டார்கள்.
சில பல நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பைக்கில் , இரு போலிஸ் காவலர்கள் வந்து , அந்த இளைஞனின் வண்டியை பற்றிக் கேட்க , அந்த மருத்தவ மனை காவலாளிகள் , அந்த டூ வீலரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்வது போல் செய்து , "ஸ்டார்ட் ஆகல சார்!" என்று சொல்ல, அந்த போலீஸ்காரர்கள் ஏதோ உத்தரவு பிறப்பித்துவிட்டு சென்று விட்டார்கள்.
அடாடா , நாட்டுல என்னன்னோமோ நடக்குதேப்பா , "அட ஆண்டாவா!" , என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே, மறு நாள் எழுந்திருக்க வேண்டுமே, இல்லேன்னா , டிராபிக் பேஜாராப் பூடுமே என்று பயந்து கொண்டே வராத தூக்கத்தை வரவழைத்து , தூங்கியே போனேன்!
No comments:
Post a Comment
படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)