Saturday, July 23, 2016

கபாலி, என் கேள்விக்கென்ன பதில்?


தினமலரில் தமிழர் நீதி என்பவர் கபாலி சம்பந்தமான ஒரு செய்திக்கு வாசகர் கருத்தாக இதை அனுப்பியுள்ளார். எனக்கு பிடித்ததால் உங்களுக்கு பகிர்கிறேன்!  மகிழ்ச்சி!

இப்படியும் தியேட்டருக்கு வெளியில கொந்தளிக்கிறார்கள் . தொழிலதிபர் ரஜினி நடித்த படத்தை(கபாலி படம் பார்க்காதீங்கோ ) பார்க்கக்கூடாதாம் . சிவாஜி ராவ் ரசிகர்கள் பொங்குகிறார்கள். 

ரஜினி அவர்கள் பொதுவாக வெளியே வரும் போது ஒரு வெள்ளை சட்டை, வேட்டி முகத்தில் தாடியுடன் சன்யாசி போல எளிமையாக வருவது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் கபாலி படத்தின் பட்ஜெட்? சுமார் 100 கோடிக்கு மேல் சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் மட்டும் 20 கோடிக்கு மேல் மற்றும் லாபத்தில் பங்கு வேறு இவ்வளவு எளிமையான மனிதருக்கு எதற்கு இவ்வளவு பணம்? அப்போ அந்த எளிமை மக்களை ஏமாற்றும் நாடகமோ??

 ரஜினி சொத்து மதிப்பு எவ்ளவு தெரியுமா சுமார் சுமார் 10,000 கோடி நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி நடத்தி வருகிறார், ரஜினி என்னும் மகா அரசியல்வாதி செய்தது என்ன? 2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன். 

சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,
 வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை நான் நிச்சியமாக எழுதவில்லை. உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. 

ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. 

“ஆறிலிருந்து அறுபது வரை”, “ஜானி” போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். “எந்திரன்” னிலும் உங்கள் நடிப்பு அருமை. லிங்கா படம் ஏன் ஓடவில்லை கதை சரியில்லாதது மட்டுமல்ல உங்கள் சுயரூபம் அறிந்ததால் பல ரசிகர்கள் படம் பாா்பதை தவிர்த்துவிட்டனர் என்பது தான் உண்மை, உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. 

அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு. நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்.. 

ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். “சூப்பர் ஸ்டார்” என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை. என்னுடைய கேள்வி இதுதான்….

நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன? நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு கூட்டம்போட்டு, ‘பகுத்தறிவாளர்கள்’ என்ற பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா? ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே …சாட்சாத் நீங்கள்தான்.

 “அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா” என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான். நீங்களே கதை,வசனம் எழுதிய “பாபா” படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள் சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை சொன்னது நீங்கள்தான். கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார். நேற்று வந்த நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை ஏற்றுவருகிறார். நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார். ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன? 

“நான் ஆன்மிகவாதி”, “தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்”, “இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்” என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த ‘இமயமலை’ அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா. “இமயமலை”யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும் தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்? இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும். 

அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம். ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும் சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன? நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன். நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை…கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய். 

1991 – இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் “ஆசிரமம்” என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன். அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று. சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள். இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்… உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று. 

TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன். “அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்” என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி. 

சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை “ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்” என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா? தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் “பிம்பங்கள்” எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார். 

முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்து கொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன? சமீபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது. 

அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன். நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா? சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே.. அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை? “என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா”. 

– படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா? சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்? எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும், லாபமும்தான் பிரதானமா? “பாட்ஷா” படத்தில் சொன்னதுபோல, உங்கள் இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள். உங்கள் பதில் “ஆம்” என்றால், அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள். 

சென்னை மழை வெள்ளத்தின் போது நீங்கள் செய்த உதவிகள் தான் அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளானது, ஏன் கமல் போன்ற நடிகர்கள் உதவி செய்யவில்லை இருந்தாலும் அவர்களை விட்டு விட்டு உங்களை மட்டும் விமர்சனம் செய்ய காரணம் மற்ற நடிகர்கள் யாரும் உங்களை போல ரசிகர்களை சுய லாபத்துக்காக பயன்படுத்துவதில்லை,

 ஆனால், எனது சில கோரிக்கைகளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன். எதோ “எந்திரன்” விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது. கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் “கபாலி ” படத்தில், மலேசியா தமிழ் மக்களுக்கு நீங்கள் போராடுவது போன்ற காட்சிகள் இருக்கும். தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த ‘பிசினஸ்”க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார். 

ரசிகர்களுக்கு பொதுவான சில கேள்விகள், 100 கோடி செலவு செய்யாமல் படம் எடுக்க முடியாதா? தற்போது எல்லாம் சில லட்சங்களில் எடுத்த படங்கள் நல்ல வரவேற்பை பெறுகிறதே? பிறகு ஏதற்கு 100 கோடி ஆக உங்களின் நோக்கம் சினிமா என்ற பெயரில் உச்ச நடிகரை வைத்து மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும் என்பது தான் ஒரு திரைப்படத்தின் நோக்கம் இதுவா?

 ஒரு திரைப்படத்தை தயாரிக்க 100 கோடி செலவு செய்ய கூட தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள், ஏழை மக்களுக்கு 1 ரூபாயக்கு உதவி செய்ய மனம் வருவதில்லை ஏன்? 100 கோடி போட்டால் 200 கோடி வரும் அது முதலீடு, திருட்டு விசிடிக்கு எதிராக போராடும் சினிமாகாரர்கள் தியேட்டரில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்களுக்கு ஆதரவாக போராடியது உண்டா? ரசிகர்கள் தான் முட்டாள்களாயிற்றே படம் பார்க்க 5000 ருபாய் கூட கொடுக்க தயாராக இருப்பார்களே, எனது தலைவர் படம் 100 கோடி வசூல் சாதனை, Record Breaking என்று மார்தட்டிக் கொள்ளும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல ஆசை படுகிறேன், அந்த பணம் ஏழைகளுக்கு உதவ போகிறதா? வசதியில்லா மாணவர்களின் கல்விக்கு உதவவா போகிறது ? 
ஒரு கோடிஸ்வரனை மேலும் கோடிஸ்வரனாக்க நமது 120 ருபாய் போகிறது அவ்வளவு தான் இதில் என்ன அவ்வளவு பெருமை நமக்கு, கோடிக் கணக்கில் வசூல் சாதனை செய்த பணம் கறுப்பு பணமாக வெளிநாட்டு முதலீடாக போகிறது என்பது உங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? 

இதில் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வேறு வெட்கக்கேடு, சாதாரண மக்கள் 10,000 போன் வாங்கினால் 300 ரூ முதல் 500 ரூ வரை வரி ஆனால் கோடிக்கணக்கில் எடுக்கபடும் படங்களுக்கு வரி விலக்கு? அதற்காக திரைப்படங்களே பார்க்க வேண்டாம் என்று சொல்ல வில்லை ரசிகர்களுக்காக நேர்மையாக பாடுபடும் எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள் அவற்றை வரவேற்போம். 

மக்களாகிய நாம் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால் நம்மை சுற்றி நடக்கும் பல அரசியல்கள் புலப்படும் அரசியல்வாதிகள் மக்கள் முன் சிறந்த நடிகர்களாகவும், சினிமா நடிகர்கள் திரைக்கு பின்னால் மக்களை சுரண்டும் சிறந்த அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. சிந்திப்பீர்!

No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)