பிரதி பலன் பாராமல் , அடுத்தவர்க்கு உதவுங்கள் - என்று கிட்டதட்ட எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன. ஆனா , இன்னிக்கி இதெல்லாம் ஒத்து வராது, நான் உனக்கு இந்த காரியத்த /உதவிய செய்தாதான் , நாளைக்கி எனக்குன்னு வர்றப்ப , நீ உதவி செய்வ,அதனால உனக்கு நான் இப்ப உதவுறேன், என்ற ரீதியில் தான் இன்று வாழ்க்கை மாறிவிட்டது பெரும்பாலானோருக்கு.
அப்படி இருந்தா தான் இந்த காலத்துல பொழைக்கமுடியும் , என்பார் சிலர். இப்ப விக்கிற வெல வாசில , நமக்கே பத்தல, இதுல நான் எங்கிட்டு அடுத்தவனுக்கு உதவுறது,அப்பிடியே கண்டுக்காம போய்கிட்டே இருக்கணும், என்பார் சிலர்.இவன் நம்ம ஜாதி,நம்ம மதம், நம்ம மொழி,நம்ம நாடு என்று ஒரு எல்லைக்குள் , பிறருக்கு செய்யும் உதவியை ஒரு எல்லை வகுத்துக்கொண்டு அதனை விட்டு வெளியில் வரத் தயங்குவார் சிலர்.
நான் அவ்வாறு எந்த வித கட்டுப்பாடில்லாமல் ,பிறருக்கு உதவி ,அதனால் எனக்கு என்ன ஆச்சு என்பதே இந்த பதிவில் நான் உங்களுக்கு சொல்லப் போகும் சேதி.
முன்னொரு காலத்தில், என் பெற்றோருடன் , அந்த புகழ் பெற்ற , திருச்செந்தூர் சென்று , முருகனுக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு வெளியில் வந்தேன்.நான் அப்போது கல்லூரி முதலாம் ஆண்டோ இல்லை பள்ளி இறுதி ஆண்டோ , படித்துக் கொண்டிருந்த நினைவு.
ஒரு வயதான பெண், "அய்யா காசு போடுங்க" என்று இறைஞ்ச, நான் ஸ்டைல் ஆக,ஒரு இரெக்க உணர்வில், என் பாக்கெட்டில் இருந்து , ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்தேன். அதனைப் பார்த்த என் அப்பாவுக்கு , திடீர் என்று கோபம் வந்து , "ஒரு ரூபா சம்பாரிச்சு பாருடா அப்ப தெரியும் ,ஆச் பூச்..." என்று ஏக்கே.47 ரேஞ்சுக்கு வார்த்தைகளால் துளைத்து எடுத்தார். நாம என்ன பெருசா தப்பு பண்ணிட்டோம் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஆச்சர்யப்ப ட்டதுண்டு. அவரின் கோபத்தின் காரணம் ,"பய்யன் காசோட அருமை தெரியாமல் இருக்கானே!" என்று இன்று புரிந்தும் கூட.
நான் சமீபத்தில், பெங்களுருக்கு சென்று திரும்பும் வேளையில் ,என் அருகே ,இரு இளம் வயது பையன்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர். நான் டிக்கெட் எடுத்து முடித்தவுடன்,கண்டக்டர் அவர்களைப்பார்த்து "டிக்கெட்" என்றார். அவர்கள் கையில் இருந்த பணத்தை கொடுத்து ,ஏதோ அடுத்து வரும் ஒரு ஊரின் பெயரைச் சொன்னார்கள். பணத்தை எண்ணிய கண்டக்டர் , "அஞ்சு ரூபா கொறயுதே " என்றார். அவர்களிடம் வேற பணம் இல்லாமல் ,அவர்கள் சங்கடத்துடன் முழிக்க, "நான் தருகிறேன்" என்று கண்டக்டரிடம் கொடுத்தேன்.
"காசு வச்சுருந்தோம்,ஆனால் போன் டாப் அப் பண்ணிட்டேன் ,அதான் பத்தல " என்றான் ஒருவன். "நான் பரவாயில்ல" என்றேன். அப்புறம் வேறு யாரோ ஒரு நண்பனுக்கு போன் செய்து , பேச ஆரம்பித்தான் அவன்.
பிறிதொரு நாள்,நான் இந்தியர்கள் வார இறுதியில் ஐக்கியமாகும் முஸ்தபாவிற்கு சென்று விட்டு, வீடு திரும்ப ,சிங்கையின் மெட்ரோ ரயிலுக்கு, (சிங்கையில் அது MRT)- ரயில் வர காத்திருக்கும் போது, ஒரு நடுத்தர வயதுடைய தமிழர் ஒருவர் வந்து, "அண்ணே , உங்க போன் கொஞ்ச நேரம் கொடுக்குறீங்களா,அவசரமா ,இந்தியாவுக்கு ஒரு கால் போடணும் ,இப்ப கூபிடலன்ன என் பொண்டாட்டி கோவிச்சுக்குவா,டாப் அப் பண்ண காசில்ல " என்றார். என் போனை கொடுத்தவுடன் ,"நான் பத்திரமா வந்து சேந்திட்டேன் , ஒன்னும் கவலைப் படாதே,பிள்ளைங்கள நல்லா பாத்துகொம்மா" என்று அவசரமாக பேசிவிட்டு ,"ரொம்ப நன்றிண்ணே" என்று போனை கொடுத்தார்,என் ரயில் வர ,என் போனை வாங்கிக் கொண்டு நகர்ந்தேன்.
மற்றொரு நாள், ஆபீஸ் வேலை முடித்து , MRT யை நோக்கி நடந்து கொண்டிருந்தவனை ,நிறுத்தினான் மற்றொரு தமிழன். நான் யாராக இருக்கும் என்று அவனை பார்க்க ,பெரிதாக ஒரு "அண்ணா வணக்கம்" வைத்தான் இரு கரம் கூப்பி. நான் தயக்கத்துடன் அவனை பார்க்க, "அண்ணே ஒரு பத்து டாலர் கொடுக்க முடியுமா" என்றான். நான் வீடு திரும்பும் அவசரத்தில் இருந்ததால் , என்ன ,ஏன் என்று எந்த குறுக்குக் கேள்வியும் கேட்காமல், அந்த பத்து டாலரைக் கொடுத்துவிட்டு ,அவன் வைத்த வணக்கத்தை பார்த்துக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.
"சரி ,சரி , பெருசா நீ அடுத்தவனுக்கு செஞ்சத சொல்ல வந்திட்டியா" ன்னு கோபம் கீபம் பட்ராதீங்க,இதோ வர்றேன் ,அந்த முக்கிய மெசேஜ்க்கு.
ஒரு நீண்ட வார விடுமுறையில் , கோலாலம்பூர்(KL) சென்று என்ஜாய் பண்ணிவிட்டு, சிங்கைக்கு திரும்ப , சல்லிசாக கிடைத்ததே என்று வாங்கி வைத்துருந்த விமானத்தை பிடிக்க LCC விமான நிலையத்திற்கு செல்லும் அந்த விரைவு ரயிலை பிடித்து ,மற்றொரு transfer பஸ் க்கு மாறி ,ஒரு வழியாக விமான நிலையம் வந்தடைந்து பார்த்தால், நாங்கள் போக வேண்டிய சிங்கை செல்லும் விமானம் ,ஓடும் பாதையில் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள் அந்த விமானக் கம்பெனியின் ஊழியர்கள். சரி , சீப் ஆ முடிக்கலாம்,டைம் கூட மிச்சப் படுத்தலாம்னு பாத்து விமான பயணத்தை சூஸ் பண்ணி , இப்ப எல்லாம் வேஸ்ட் என்று நொந்தபடி, மறுபடியும் bus பிடித்து KL-பஸ் நிலையத்தை , இரவு பதினொரு மணிக்கு சென்று சேர்ந்தோம் . அங்கிருந்த ஒரு தமிழ் பஸ் ஏஜன்ட்,இடம் கிடைப்பது கடினம் என்று முதலில் பயம் குடுத்திய அவர், தனக்கு தெரிந்த சிங்கை பஸ்ஸில் இடம் இருப்பதாகச் சொல்லி எங்களை அழைத்து சென்றார். அரை மணி நேரக் காத்திருப்புக்கு பிறகு ,அங்கு வந்த ஒரு சிங்கை செல்லும் தனியார் பஸ்சில் இருந்த கடைசி சீட்டில் ஏற்றிவிட்டு, "அண்ணே ,xxx ரிங்கட் தாங்க" என்று டிக்கெட் போட்டார். நான் கையில் இருந்த மலேசிய கரன்சிகளை எண்ணிப் பார்க்க , கிட்டத்தட்ட நூறு ரிங்கட் வரைக்கும் குறைந்தது. ஏனென்றால் ,அவர் கூறிய கட்டணம் வழக்கத்தை விட ஒன்றரை மடங்கு அதிகம். "பக்கத்தில ஏதாவது ATM இருக்கா?" என்று நான் கேட்க ,"என்னண்ணே இப்ப போயி ATM கேட்குறீங்க ,பஸ் வேற கெளம்புற நேரம்" என்றார் அந்த ஏஜன்ட். என்ன செய்றது இப்ப என்று நான் தவிக்கத் தொடங்க, "எவ்வளவு கொறையுது " என்று முன்னால் உட்கார்திருந்த ,எனக்கு முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு தமிழர் கேட்டார். நான் குறைவதைச் சொல்ல ,சட் என்று தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தார் அவர். சிங்கை வந்ததும் ,அவர் கொடுத்த அவரின் வங்கி கணக்குக்கு என் கடனை அனுப்பி வைத்த பின் தான் எனக்கு நிம்மதியானது ,அதுவரையில் எனக்கு அந்த மாதிரி ஒரு நெருக்கடி வந்ததில்லை.
அவர் மட்டும் அன்று உதவ வில்லை என்றால், அந்த நடு இரவில், ATM தேடி அலைந்து ,அதன் பின் பஸ் பிடித்து ,சிங்கை வந்திருந்தால் ,கட்டாயம் மறு நாள் நான் ஆபீஸ் போயிருப்பது சந்தேகமே.
சும்மாவா , சொல்லிருக்காங்க பெரியவுங்க! தர்மம் தலை காக்கும் ,தக்க சமயத்தில் உயிர் காக்கும்!
உண்மைதான். தர்மம் கொடுப்பதால் ஒரு நாளும் பொருள் குறைவதில்லை.(தெரிஞ்வங்க கிட்ட அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். அதாவது கேட்டுட்டாங்கன்னா.....)
ReplyDelete