Wednesday, March 9, 2011

எனக்கு பதினெட்டு பிளஸ் ...உனக்கு பதினெட்டு பிளஸ்

திடுமென்று வயற்றில் ஒரு வலி.மெல்ல மெல்ல வலி வலிமையானது. ஒரு வேளை அது இன்னைக்கு தானா? இல்லையே இன்னும் ஒரு வாரம் இருக்குதே என் கணக்குப் படி..ஐயோ யாரிடமும் போய் காட்ட முடியாத ஜென்மமா படைசேயே ஆண்டவா!

வேண்டாம் , டென்ஷன் ஆகக் கூடாது இந்த மாதிரி நேரத்தில். ஏதாவது நல்ல விஷயம் நினைச்சிக்கணும் இந்த மாதிரி நேரத்தில.

மெல்ல நினைவை அவனை பாத்த , பழகிய நாட்களில் மனதினை செலுத்தினேன். அன்று நான் வழக்கமாக போகும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன் , அப்பொழுது தான் அவனை பார்த்தேன். நல்ல துள்ளலான நடை , கண்களில் ஒரு பளிச் பளிச். அவனும் என்னை பாத்து பார்க்காது போல் இருந்து அந்தப்பக்கமாக நகர்ந்தான். மறு நாள் அதே இடத்தில அவன். மனம் ஏனோ அவனை சுற்ற , மெல்ல எங்களுக்குள் பழக்கமாகியது.

ஒரு நாள் மெல்ல அவன் பட்ட பகலில் எல்லாரும் பார்த்திருக்க தன சில்மிஷத்தை ஆரம்பித்தான். மெல்ல கிட்ட நெருங்கி முகரத் தொடங்கினான். என்ன இது, விடு , எல்லாம் பாக்கிறாங்க , கேட்காமல் முன்னேறினான். ஆனால் அந்த அனுபவம் புதுசாக ,சுகமாக இருந்ததால் மெல்ல கரைய ஆரம்பித்தேன்.

இதோ இன்று இந்த வலி அன்றைய சுகத்தின் விளைவாகும் என்று அன்றே தெரியாமல் போனதே. அதற்கப்புறம் அவனை எங்கும் காண முடியவில்லை.

எது எப்படியோ, இன்னும் ஒரு வாரத்தில் ,என் செல்ல குட்டி வெளியே வந்துவிடும். எப்படி இருக்கும் , நிச்சயமாக , நான் + அவனாக கலந்து ஒரு அற்புத அழகாத்தான் இருக்கனும்,எனக்கு நல்லா தெரியும். வயிறு ரொம்ப பெருசா இருக்கே , ஒரு வேளை ஒண்ணுக்கும் மேல இருக்குமோ? எத்தனை பிறந்தாலும் கவலை இல்லை, எல்லாத்தையும் நல்ல படியா வளக்கணும்.

ஆ , வலி,வலி,ஐயோ மயக்கமா வருதே. என் செல்ல குட்டிகளின் இன் குரல்கள் என்னை மெல்ல மெல்ல எழுப்பியது! அப்போது தான் அவைகளை பார்த்தேன்,என்ன அழகான ,அருமையான இரண்டு குட்டிகள். என் கனவு வீண் போகவில்லை.

என் கண்காணிப்பில் என் செல்லங்கள் அருமையாக வளர ஆரம்பித்தன. பார்க்கும் பொழுதே அள்ளி கொஞ்ச வேண்டுமென ஆசை கொடுக்கும் அழகிய இளம் தளிர்கள்.

அப்போது தான் அது நடந்தது. ஒரு அம்மாவும் , ஒரு பொண்ணும்,காரிலிருந்து இறங்கினார்கள். அந்த பெண் குழந்தை ஓடி வந்து ,என் செல்லங்களை பார்த்து கொஞ்ச ஆரம்பித்தது. எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

அப்போது வீட்டின் உள்ளே இருந்து என் பெயர் சொல்லி அழைக்கும் ஓசை கேட்டது. உள்ளே போய் பாத்த பொழுது ,சமையல் அறையில் பால் ரெடியாக இருந்தது. அதை விரைவில் குடித்து விட்டு ,என் இடத்துக்கு விரைந்தேன். அங்கே ,என் செல்லத்தில் ஒன்றை காணவில்லை. ஐயோ,என்ன இது,எங்க என் செல்லம், காரை,அந்த புதிய நபர்களையும் காணவில்லை. ஒன்றும் புரியாமல் அங்கும் இங்கும் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை என் செல்லத்தை.

என் மற்றொரு செல்லம் மெல்ல என்னிடம் வந்து கொஞ்சியது. அதற்கும் பால் கொடுத்து,தூங்கப் பண்ணினேன். சிறிது நாளில் என் இன்னொரு செல்லத்தையும் காணவில்லை. கடவுளே, என்ன கொடுமை இது. இந்த சோதனை நான் தாங்க முடியாத பெரும் சுமையாய் என்னை கொல்கிறதே!

அதற்கப்புறம் ஏனோ எனக்கு,வாழ்கை பிடிக்கவில்லை , உண்ண பிடிக்கவில்லை. நான் கடைசியாக எப்போ சாப்பிட்டேன் என்றே தெரியவில்லை. என் கண்கள் இருள ஆரம்பித்தது, மெல்ல மயங்கி சரிந்தேன்.

"டே கணேசா, நம்ம நாய்க்கு சோறு வட்ச்சயாட? வச்சன்ப்ப,ஆனா அது சாப்டாம படுதுருசுப்பா! அடப் பாவமே,அதோட குட்டிகள நாம வித்திட்டது அதுக்கு தெரிஞ்சி போச்சு போல , போடா உடனே போய் அந்த மாட்டு டாக்டர கூப்பிடுடா!"

6 comments:

  1. அடப்பாவி மக்கா..நான் ஏதோ சரோஜாதேவி கதைன்னுல்ல நினைச்சேன்!

    ReplyDelete
  2. புது வரவா..வருக வருக..வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. ada... அட.. குமுதத்துக்கே அனுபலாம் போல..

    ReplyDelete
  4. hey..
    relly nice story..
    but y u put this title?

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)