Saturday, December 7, 2013

என்னா பாட்டுடா !

எங்கள் ஊரில் ஒரு டைளர் …காலப் போக்கில் அவர் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜண்டாக மாறி கோடியில் புரள ஆரம்பித்தார்.  ஊரில் அவரும் ஒரு நம்பர் ஒன் ஏஜன்ட்.

என் கிரகம் . அவர் மூலமாக ஒரு வணிக கட்டிடம் விலைக்கு வந்ததால் வாங்கத் துணிந்தேன் . உடனே பல கோடி என்று எண்ணவேண்டாம் !  அது ஒரு மூன்று மாடி கட்டிடம் . அதில் ஒரு தளம் மட்டுமே என்னால் வாங்க முடிந்தது. விலை பேசி , அட்வான்ஸாக சில பல லட்சங்களை வாரி இறைத்தேன். 

இன்னும் சில நாளில் பத்திரப் பதிவு என்று காத்திருந்தேன்.  அதற்குள் பல வித குழப்பங்கள். விளைவித்தது உற்றாரும் , உறவினர்களும்.  அவர்கள் சொன்னது , "சரியான கேணப் பயடா நீ..  இந்த மாதிரி ஒரு ப்ளோர் வாங்கிற கலாச்சாரம் , பெரிய சிட்டிக்கு வேணா ஒத்து வரும் , இங்கெல்லாம் சரிபடாது , அது , இது , என்று ஒரே அட்வைஸ் மழை"….

என்னடா இது , அவங்க சொன்ன மாதிரி , அவசரப்பட்டுடோமோ என்று ஒரே குழப்பம் , சில நாட்கள் கழிந்தது ….மறு நாள் பத்திரப் பதிவு ….இரவெல்லாம் உறக்கமில்லை …

எப்படி இந்த பத்திரப் பதிவை தட்டிவிட்டு , கொடுத்த அட்வான்சை திருப்பி  வாங்குவது. மறு நாள் விடிந்தது . பேசாமல் துணிந்து வாங்கலாம் என்றும் ஒரு நப்பாசை.

காலையில் இரு மனதுடன் காத்திருந்தேன் ….திக் திக் நிமிடங்கள்…

அப்போது அந்த பெரிய மனிதரின் வலது கை , என் வீட்டில் விஜயம் செய்தார்.  என்னடா , காலை ஏழுமணிக்கு வந்திருக்கிறாரே , பத்திரப் பதிவு ,  பத்து  மணிக்கு மேல் தானே என்று எனக்கு ஒரே யோசனை.

அவர் சொன்னது , எனக்கு வயிற்றில் பாலை வார்த்தது.  அதாவது நான் சொன்ன ரியல் எஸ்டேட் புள்ளியின் , தாயார் இறந்து விட்டதாகவும் ,  பத்திரப் பதிவு நடக்க இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஆகும் என்றார்.


"ஆகா , அடிச்சது லக்கி பிரைசு "  என்று அவரின் தாயார் காரியத்திற்குப் போய் வந்து விட்டு , இரண்டு மூன்று நாட்களுக்கு  பிறகு , 'வாழ்க்கையில்  முதன் முதலில் வணிகத் துறையில் காலடி  வைக்கலாம் ' என்று நினைத்து  செய்த  காரியத்திற்கு இப்படி ஒரு தடங்கல் வந்தது மனதிற்கு என்னவோ போல உள்ளது , எனவே இந்த டீல் கான்செல் ' என்று பக்குவமாக எனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தேன் .

ஆனால் அவரோ , "அப்படியா , நீ கொடுத்த அட்வான்சு செலவாயிரிச்சு , கொஞ்ச நாள் பொறு , திருப்பி கொடுக்கிறேன் என்று வயிற்றில் அமிலத்தை வார்த்தார் அந்த பெரிய மனிதர்".

நான் கேள்விப் பட்ட வரையில் , நீங்கள் அட்வான்சு கொடுத்து விட்டு , பின் டீலை கான்சல் செய்தால் , கொடுத்த அட்வான்சு , 'அரோகரா தான்'.  இந்த விஷயம் எனக்கு முதலில் தெரியாது.

இதெல்லாம் மற்றவர்கள் பயமுறுத்தியது. ஒருவன் நஷ்டப் படும் பொழுது , இந்த உறவினர்கெல்லாம் , என்ன ஒரு மகிழ்ச்சி போங்க …


மீண்டும் உறக்கம் இல்லாமல் , சில பல நாட்கள் ….பின்பு அப்படி இப்படி என்று பல பஞ்சாயத்திற்கு பிறகு  , அந்த பெரிய மனிதர் வைத்திருந்த நிலத்தை , அந்த வணிக வளாகத்திற்கு பதிலாக , கிரையம் செய்து கொடுத்தார்.

சமீபத்தில் கீழே உள்ள தலைவர் பாட்டை பார்த்தவுடன் இந்த பதிவை எழுதி விட்டேன்…

Friday, November 22, 2013

Sunday, October 27, 2013

ஆதலால் காதல் செய்வீர் - பகுதி 1

நண்பர்களே ,  என் உறவினர் ஒருவர் மருத்துவராக சென்னையில் பணி புரிந்த பொழுது ,அவரின் வேலையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை பகிர்ந்த போழ்து , சிக்கிய விடயங்களை இரண்டு பதிவுகளாக கொடுக்க எண்ணியிள்ளேன் , இது முதல் பதிவு:


என் உறவினர் அன்று வழக்கம் போல் சென்னை அரசாங்க மருத்துவ மனையில் , தன் மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது ,  ஒரு வயதான அம்மா , ஒரு இளம் பெண் , மற்றும் ஒரு நடுத்தர வயதுப் பெண் , என் உறவினரை அணுகினர்.

அந்த வயதான பெண்மணி , 
 "டாக்டர் , (அந்த இளம் பெண்ணை  சுட்டிக் காட்டி ), இது என் மருமகள் ,  நாங்கள் , பேசிகொண்டிருந்த பொழுது , என் மருமகளின் வயிறு தீடிர் என்று வீங்கி விட்டது , பயங்கரமாக வயிறு வலிக்கிறது என்கிறாள் ,அவளுக்கு என்ன பிராப்ளம் என்று பாருங்க "

"பொருங்க நான் செக் பண்றேன் "....

சில நிமிட சோதனைக்குப் பிறகு , " மேடம் , உங்க மருமக கர்ப்பமா இருக்கா "


அந்த மாமியார் சில கணம் அதிர்ச்சியுற்று ,  "டாக்டர் அது எப்படி , என் மகன் , இவ புருஷன் , வெளி நாட்டில் வேலை செய்கிறான் ,  அவன் ஊருக்கு வந்து ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு , நீங்க கொஞ்சம் நல்லா செக் பண்ணுங்க "....

என் உறவினரும் , மற்ற டாக்டர்களும் இது ஒரு விவகாரமான கேஸ் என்பதை புரிந்து கொண்டனர்.
அவர்களுக்குள் டிஸ்கஸ் செய்துவிட்டு , 
"அம்மா , இங்க பாருங்க , நீங்களும் , உங்க  மருமகளும் உள்ள வாங்க ..."
என்று அவர்களை உள்ளே அழைத்து , மருமகள் பிரசவ வலியில்  இருப்பதை சுட்டிக் காட்டி, அந்த மாமியார் மற்றும் அவர் உறவினப் பெண் முன்னிலையே , அந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது ...

வெற்றிகரமாக குழந்தை வெளியே எடுக்கப்பட்டு , அந்த இளம் பெண் ரெஸ்ட் எடுக்க வார்டில் அனுமதிக்கப்பட்டாள் .  அந்த மாமியாரிடமும் , உடன் வந்த உறவினப் பெண்ணிடமும் , அந்த குழந்தை  மருமகளுக்குதான் பிறந்தது என்று எழுதி வாங்கப்பட்டது .

பின் அந்த மாமியாரிடம் விசாரித்த போது :

"என் மகன் , வெளி நாட்டில் வேலை செய்கிறான்.  அவன் தான் மூத்த மகன் "
"என் வீட்டில் அவனைத் தவிர , எனக்கு இரண்டு மகன்கள் ".
"என் இரண்டாவது மகன் , கல்யாணம் ஆனவன் ,அவன் உண்டு அவன் வேலை  உண்டு என்று இருப்பான் "
"என் மூன்றாவது மகன் , பிளஸ் டூ படிக்கிறான் ...என் மருமகள் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாள் ..அவர்கள் இருவரும் நன்றாக பேசிக் கொள்வார்கள்"

என்று குடும்ப சூழ் நிலையை விளக்கினார்.


அந்த பெண்ணிடம் விசாரிக்க , "இந்த விபத்தின் சூத்திரதாரி அந்த பிளஸ் டூ படிக்கும் மாணவன் என்று புலப்பட்டது ".

விஷயம் கேள்விப்பட்டவுடன் , அந்த வெளி நாட்டு கணவன் , உடன் சென்னை வந்திறங்கினான்.

அந்த குழந்தை , வலுக் கட்டாயமாக , தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு , மாமியாரிடம் கொடுக்கப் பட்டது .

கணவன் , அந்த மனைவிக்கு மட்டும் டிக்கட் எடுத்து உடன் அழைத்து  சென்றான் மருத்துவ மனையில் இருந்து நேராக .


ஆகவே, நண்பர்களே , "ஆதலால் காதல் செய்வீர்!"...

தொடரும் ....

Thursday, July 25, 2013

பேய் இருக்கிறதா இல்லையா?

மனிதனின் பிரதான உணர்ச்சிகளில் ' பயம்' ஒரு  முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் யாரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. அதிலும் 'பேய்' பயம் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த 'பயத்தை' வைத்து எத்தனையோ பேர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாய்வழிக் கட்டுக்கதைகள் , எத்தனை சினிமாக்கள் , புத்தகங்கள் , பில்லி , சூன்யம் மாந்த்ரீக வேலைகள் என்று இந்த பேயை வைத்துத்தான் வித விதமான வியாபாரங்கள்.  சிங்கப்பூர்  ஒரு சிறிய நாடென்றாலும் இங்கும் தினமும் எண்ணற்ற பேய் கதைகள் உருவாகிக் கொண்டுதான் உள்ளன.  "Singapore Ghost Stories" என்று ஒரு புத்தகமே போட்டு  பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  புதிதாக வீடு வாங்குபவர்கள் , கிரகப் பிரவேச பூஜை செய்வதோடு நிறுத்தாமல் , பேய் ஓட்டும் சிறப்பு நிபுணர்களை கொண்டு வந்து பேய் ஓட்டுவதையும் மறக்காமல் செய்து விடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் கட்டடங்களில் வசிப்போருக்கு ஏற்படும் பொதுவான பேய் அனுபவம் என்னவென்றால் , நடு  இரவில் , அவரவர் தங்கியிருக்கும் வீட்டின் மேல் தளத்திலிருந்து 'டொக், டொக்' என்று மெலிதாகத் தட்டும் சத்தம்.  இதனை என் பல நண்பர்கள் அனுபவித்து  சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் கேட்டிருக்கிறேன். "எவண்டா இந்த நேரத்துல லூசுத் தனமாத் தட்டிக்கிடுருக்கான்" என்று  படுத்துவிடுவது என் பழக்கம். ஆனால் சில நண்பர்கள் பயத்தில் வீட்டையே காலி செய்துவிட்டு வேறு வீடு பார்த்துக் கொண்டதையும் கேள்விப்பட்டுள்ளேன்.

இந்த பேய் பயம் , பொதுவாக நாம் பள்ளிப் பருவத்தில் இருக்கும் போது தான் நமக்குள் சக மாணவர்கள் சொல்லும் கதைகளை வைத்து கருவாகி பின் உருவாகிறது என்றால் மிகையாகாது.
நான் பள்ளியில் படிக்கும் போதெல்லாம் , 'தலையில்லா முண்டம்' ஊருக்குள் சுத்தி வருகிறது என்று ஒரே பயம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.  சரி அந்தக் காலத்தில் தான் அப்படி என்றால் , இப்போதும் இது மாதிரி பள்ளிகளில் அவ்வப்போது யாரவது எதையாவது கிள்ளிப் போட்டு அது எல்லாக் குழந்தைகள் மனதிலும் கிலி உண்டாக்குவதை கேள்விப்படும்போது அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

சமீபத்தில் கூட என் மகள் பள்ளி போய்விட்டு வந்து ஒரே அழுகை. என்னவென்று கேட்டபோது, 'ஏதோ பிறந்த குழந்தை ஒன்று பேசியதாகவும், நான் சிறு பெண்களைக் கொன்று ரத்தத்தைக்  குடிக்கப் போகிறேன்' என்று சொன்னதாக யாரோ பீலா விட்டு , தமிழ் நாடே அல்லோகலப் பட்டதை கேள்விப் பட்டு இருப்பீர்கள்.

என்னடா பேய் இருக்கிறதா , இல்லையா என்று பட்டி மன்றத் தலைப்பை விட்டு விட்டு என்னமோ மொக்கை போடுறானே என்று யோசிகிறீர்களா, முதலில் நான் சிறு பிள்ளையாக இருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சொல்லிவிடுகிறேன். அதனை வைத்து பேய் இருக்கிறதா , இல்லையா என்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.

என் அப்பா பாட்டி மற்றும் தாத்தா ,  கேரளாவில் உள்ள 'கஜனாப் பாறை' என்ற இடத்தில் ஏலக்காய் தோட்டம் வைத்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் அப்பா தன்  அம்மாவைப் பார்க்க புறப்பட்டபோது  சிறுவனான என்னையும் கூட , அவரின் அலுவலக ஜீப்பில் அழைத்துக் கொண்டு போனார். இந்த கஜனாப் பாறை , மூணாறு போகும் வழியில் உள்ளது , எங்கு பார்த்தாலும்  ஏலத் தோட்டம் அல்லது தேயிலைத் தோட்டம் என்று பார்க்க அழகாக இருக்கும்.

போடியிலிரிந்து மூனாறு சென்றவர்களுக்குத் தெரியும் , அந்த பாதை எவ்வாறு பாம்பின் உடல் போல் வளைந்து நெளிந்து மேலே செல்லும் என்று. பெரும்பாலான  சமயங்களில் ஒரே குண்டும் குழியுமாக இருக்கும் தமிழக எல்லையான போடிமெட்டுவை அடையும் வரை. போகும் வழியில் ஒரு சிறு அருவி கூட உண்டு, மழைக் காலத்தில் வெள்ளிக் கம்பி போல் நீர் வீழ்வது பார்க்க நன்றாக இருக்கும்.

ஒரு வழியாக அதில் பயணித்து என் பாட்டி  வீட்டை அடைந்து, அளவளாவி , விருந்து உண்டு , மாலையாகி விட்டது. அலுவலக ஜீப்பில் வந்ததால் அன்றே திரும்ப வேண்டும் என்றும் அப்பா கிளம்பத் தொடங்கினார். நானும் அரை மனதுடன் அவருடன் கிளம்ப வேண்டியதாயிற்று மறு தினம் பள்ளிக்குப் போகவேண்டும் என்பதால்.

நாங்கள் அங்கிருந்து கிளம்பியபோதே மெதுவாக இருட்டத் தொடங்கும் வேளை. நான் சொன்னமாதிரி இருட்டில் அந்த மழைப் பாதையில் ஓட்டுவது சிரமம் என்பதால் போக்குவரத்து மற்றும் ஆள் நடமாட்டம் மிக மிக அரிது. இருந்தாலும் வேறு வழியில்லை ஊருக்குத் திரும்பியே ஆக வேண்டும் என்பதால் , வண்டி சீரான வேகத்தில் அந்த வளைந்து நெளிந்த பாதையில் இறங்கிக் கொண்டிருந்தது.

கால்வாசி தூரம் இறங்கும் முன்னரே , ஆதவன் மறைந்து , நல்ல கும்மிருட்டாக இருந்தது. என் நினைவில் மேல் நோக்கி எந்த வண்டியும் ஏறிப் போனதாகத் தெரியவில்லை. எங்கள் வண்டியின் பின்னாலும் எந்த வண்டியும் வருகிற மாதிரியும் அறிகுறி இல்லை. வண்டி நடுக் காட்டில் போய்க் கொண்டிருந்தது. சுத்தமாக மனித , வாகன நடமாட்டம் அற்ற இடத்தில் வண்டியில் நாங்கள்.


நான் வண்டியின் முன் விளக்கு பாதையைத் தாண்டி வீழ்ந்து வழி காட்டுவதை வேடிக்கைப் பார்த்து கொண்டே ஜீப்பின் பின் சீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் , அப்புறம் அந்த இருட்டில் பொழுது போக்க  வேறு வழி?

அப்போதுதான் அது நடந்தது. ஒரு வளைவில் எங்கள் ஜீப் திரும்பும் போது வண்டியின் முன் விளக்கு வெள்ளிச்சம் பட்டதில் நான் அந்த உருவத்தைப் பார்த்தேன். அது ஒரு பெண் உருவம் தனியாக நின்று கொண்டிருந்தது. அது ஒரு நடுத்தர வயது பெண்மணி. அவள் மூக்கில் இருந்த தங்க மூக்குத்தியில் விளக்கு வெளிச்சம் பட்டு டால் அடித்தது. இப்போது நினைத்தாலும் அந்த  முகம் என் நினைவில் ஒரு சில்லிப்பை  தோற்றுவிக்கிறது.  அது விட்டலாசார்யார் படங்களில் வருவது போல் , முடியை விரித்துப் போடவில்லை. நார்மாலக ஒரு பெண்மணியாகவே இருந்தது. அதனால் எனக்கு அப்போது ஒன்றும் தோணவில்லை.

ஒரு வழியாக எங்கள் ஜீப் அடிவாரத்தை அடைந்து , போடியை நோக்கி செல்லத் துவங்கும் வேளையில் , திடீர் என்று ஒரு டயர் பஞ்சர் ஆகி விட்டது.  டிரைவர் கொஞ்சம் ஸ்லொவ் செய்து விட்டு , ஸ்டெப்னி வேறு இல்லை , நகருக்குச் செல்ல இன்னும் கொஞ்ச நேரம் தான் என்று வண்டியை ஒருவாறு அட்ஜஸ்ட்  செய்து ஓட்டத் தொடங்கினார்.  அப்போதும் எனக்கு என்றும் தோணவில்லை.

இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக டிரைவருக்குத்  தெரிந்த வொர்க்ஷாப்பில் வண்டியை நிறுத்தி , பஞ்சர் பார்க்கச் சொன்னார் டிரைவர். பஞ்சர் வேலை நடக்கும் போது , என் அப்பா , மெதுவாக பேச்சை  ஆரம்பித்தார். 'டிரைவர் , நீங்க வழியில  ஒரு பொண்ணு கிராஸ் ஆச்சே பாத்தீங்களா ? " என்று .  அவர் , 'இல்ல சார் நான் எதுவும் பாக்கலியே ' என்றார்.  நான் முந்திரி கொட்டைபோல் , 'நான் பார்தேன்ப்பா ' என்றேன்.  அப்போது அந்த பஞ்சர் ஓட்டுபவர் , 'எந்த இடத்துல வச்சு பாத்தீங்க சார்' என்று என் அப்பாவை கேட்க, அவர் இந்த மாதிரி ஒரு வளைவுக்குப் பக்கத்தில் பார்த்ததையும் , சுற்றி கண்ணுக் கேட்டிய தூரம் வரையில் வீடு எதவும் இருந்த மாதிரி தெரியவில்லை என்றார் என் அப்பா.  அந்த பஞ்சர் கடைகாரர் , எந்த இடம் அது என்று மூளையை கசக்கி கேள்வியாக கேட்டு ,
'ஒ அந்த புலியூத்து அருவி பக்கம் இருக்கிற வளைவா  சார் , அது ஒரு டேஞ்சரஸ் வளைவாச்சே   சார், போன  வாரம் கூட ஒரு பஸ் ஆக்சிடெண்ட் , ஜீப் ஆக்சிடென்ட் ஆச்சு , அப்படி இப்படின்னு பொழுதண்ணிக்கும் ஆக்சிடன்ட் சார் அங்க , ஒரு வேளை நீங்க பார்த்தது பேயா கூட இருக்கலாம் ' என்று மெல்ல கொழுத்திப் போட்டார். என் அப்பாவும் , 'நல்ல வேலை  எங்க டிரைவர் பாக்கலை , அவர் பாட்டுக்கு வண்டிய நிறுத்தி விசாரிசிருந்தா என்ன  ஆயிருக்குமோ ' என்று அவர் பங்குக்கு சொல்லி , என் பேய் பயத்தை கப்பென்று நெஞ்சில் பச்சக் என்று ஓட்ட வைத்து விட்டார்.

அன்றிலிருந்து எனக்கு அவ்வப்போது பேய் பயம் வருவதுண்டு இரவில் தனியாக இருக்கும்போது , குறிப்பாக கல்யாணத்திற்கு முன்பு வரை. கல்யாணத்திற்கு பிறகு இல்லையா என்று கேட்குறீங்களா?

எப்படி இருக்கும் அதான் ஒரு பேய்  கூடவே வாழ்க்கை நடத்துரனே!

ஐயோ!!!!!!!!!!!!! அம்மா கொல்றாலே !!!!!!!!!!!! ( என் மனைவி இந்த பதிவை எழுதும் போது பார்த்துவிட்டாள் )நான் முன்னர் எழுதிய மற்றொரு பேய் அனுபவத்தையும் படியுங்கள் :   காஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ ?


நன்றி மீண்டும் வருக!Tuesday, July 23, 2013

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை!!!

  •    தலைப்பை கொடுத்த வாலிக்கு இறை அஞ்சலி.

  •    சொன்னா புரியாது படத்தின் ஒரு காமடி டயலாக் , ஹலோ எப் எம்மில் அடிக்கடி போடுகிறார்கள் , கொஞ்சம் கடி என்றாலும் சட்டென்று சிரிப்பை வரவழைத்தது :
              மனோபாலா:  உன் பேர சொன்னதுக்கே இந்த அடி அடிகிரானுங்க 
            சிவா :       என் புல் நேம் சொன்னீங்களா?
              மனோபாலா :  உன் புல் நேம் என்ன?
                சிவா :   என் புல் நேம்  'சிவா '

  •  ஆனாலும் மிர்ச்சி சிவா ,  தமிழ் பட நெனப்புலேயே வண்டி ஓட்டுனா எப்படி , கொஞ்சம் நடைய  மாத்துங்க , இல்லன்னே சீக்கிரம் காணாமப் பூடுவீங்க.

  • இயக்குனர் இமயத்தின் சமீபத்திய படத்தில் விரல் சூப்பும் காட்சியை சிலாகித்தவர்கள் / வெறுத்தவர்கள் , மரியானில் கதா நாயகி லாலி பாப் சாப்பிடுவதை டைட் குளோசப்பில் காட்டியதை குறிப்பிடக் காணோம் , ஒரு வேளை ரொம்ப சார்டாக இருந்ததினாலோ ?

  • அஜித்,சாலினி போல் இணை  பிரியாமல் ஜோடியாக இருப்போம் என்று தலையில்  அடித்து சத்தியம் செய்யும் சிம்புவிற்கு , அப்பா , அம்மாவைப் போல் என்று சொல்லத் தெரியவில்லை ஏன்? அவங்களுதும் காதல் கல்யாணம் தானே

  •   ரஜினிக்கு ஏன் இவ்வளவு தடுமாற்றம் கோச்சடையானை வெளியிடுவதில், பேசாம  மகள் விருப்பத்திற்கே விட்டுருக்கலாம்.

  • இவரால் பாவம் கே எஸ் ரவிக்குமார்க்கும் கெட்டகாலம் …ஹிட்டு கொடுத்து நாளாச்சு ….முதல்ல இவர நம்பி அவர் ஜக்கு பாயி ஆரம்பிச்சு அப்புறம் டிராப் ஆகி , பின்ன சரத்குமார் மூலமா பிளாப் ஆகி …

  • பிரபல  நாளிதழில்  ,  தலைவா படத்துனால , விஜய் மேல அம்மா   காண்டாகி , அவரையும் , அந்த பட தயாரிபாளரையும்   உள்ள போட்டுடாங்கன்னு குத்து மதிப்பா அடிச்சு விடுரானுங்கோ , யாரும் கோபப் படக் காணுமே…  படத்த ஓட வைக்க என்னமா ரீல் வுடுரானுன்கப்பா.

  • காற்றுள்ள போதே தூற்றிக் கொள்லனும்மின்னு இன்னைக்கி பொறந்த நாள் கொண்டாடும் அந்த கீரோ அண்ணனும் ,கீரோ  தம்பியும்   படம் வெளியிட்டு  காசு பாக்கிறது சில பேருக்கு ஏன் உறுத்துது …  தொன்று தொட்டு எல்லா கீரோவும் துட்டுக்கு தான மாரடிகிறாங்க ?

  • இந்த ஹோட்டல் ல அந்த அயிட்டம் நல்லாருக்குமின்னு  தேடிப்போனா அன்னைக்கி மட்டும் கன்றாவியா கொடுகிரானுன்களே ஏன் ?

பின் குறிப்பு :  பல பிராப்ள பதிவர்கள் எல்லாம் கீட்சரில் கண்ட மேனிக்கி  கீச்சுவதால் நானும் கீச்சிப் பார்த்தேன் ..அட போங்கப்பா இந்த வெளாட்டுக்கு நான் வரல...            

Saturday, July 20, 2013

ஒரு ஜோக்கும், ஒரு பாடலும்...

வழக்கம் போல் வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது காதில் விழுந்தவைகள் இவை :-

மேட்டர் 1:

இது ஒரு ஜோக் , முக்கியமாக மனைவியிடம் அகப்பட்டு முழிக்கும் கணவர்கள் இது மாதிரி ஜோக்குகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். நான் விழுந்து விழுந்து சிரிச்சதுல ஒரே வலி தான் போங்க. ஏற்கனவே கேட்டுருந்தாலோ , அட இது என்ன பெரிய ஜோக் என்று தோணினால் , உங்க லெவல் வேற பாஸ்.

ஒரு கணவன் மனைவிக்கு , திருமண அனிவேர்சரி நெருங்கியது. மனைவியிடம் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்க்கும் 'மொறை' செய்யாவிட்டால்  'மொத்து' விழுமே என்று, கடமையாக அவளிடம்   கணவன் சென்று ,
   அன்பே நம் கல்யாண நாளுக்கு உனக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறேன் என்று ஒரு பிட்டை போட்டான்.
  மனைவி, ஆஹா , நாம இந்த வருசம் கேட்டு வாங்குறதுக்கு முன்னால  ஆடு தானாவே தலையை வெட்டக் கொடுக்குதே என்று சந்தோசத்துடன் , 'ஏங்க , என்னை நான் இதுவரைக்கும் போகாத இடத்துக்கு கூட்டிட்டு போங்க ' என்றால் .

உடனே கணவன் அவள் கையை  பிடித்து இழுத்து  தர தர என்று இழுத்துப் போய்  ஒரு அறையில் கொண்டு விட்டான். அந்த அறை ,  சமையல் அறை .  

மேட்டர் 2

அதே வானொலியில் பல நாட்களுக்குப் பிறகு இந்த பாட்டை  போட்டார்கள். இந்த பாடல் முதலில் கேட்க்கும் போது ஒரு மாதிரியாக இருந்தாலும் , கேட்க கேட்க பிடிக்க ஆரம்பித்துவிட்டது. 
இந்த பாடல் கங்கை அமரனின் வாரிசுகள் , மங்காத்தா புகழ் வெங்கட் பிரபு மற்றும் 'என்ன கொடும சரவணா' புகழ் பிரேம்ஜி  அமரனின் கைவண்ணம் என்பது பின்பு தான் தெரிந்தது.

சரி யு டீபில்  கிடைக்குதா என்று பார்த்த போது , காட்சியுடன் வந்த பாடலைக் கேட்டபோது , ஒரே காமடியாக இருந்தது. பார்த்து ரசியுங்கள் :-
நன்றி மீண்டும் சந்திப்போம்.Wednesday, July 17, 2013

ஓல்ட் காஸ்கே நமஹ!

அனைத்து குடிமகன்களுக்கும் சமர்ப்பணம்...
Saturday, July 6, 2013

எழுத்தாளர் சுஜாதாவும்,கேபிள் அண்ணனும், நானும்!தலைவர் சுஜாதா எழுத்துலகில் பல புதுமையை புகுத்தியவர் என்று சொன்னால் மிகையில்லை  என்று அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள்  என்று நம்புகிறேன். சமீபத்தில் அவர் ஒரு காலத்தில்  ஆவியில் வெறும் 55 வார்த்தைகளில் எழுதிய சிறு கதைகள் கண்ணில் பட்டது.  படித்ததும் ஆஹா வாத்தியார் வாத்தியார் தான் என்று தோன்றியது.

சரி நாமளும் ஒரு முயற்சி பண்ணலாம் என்று தோன்றி நான் கிறுக்கியது முதலில் கொடுக்கிறேன் . வாத்தியாரின் கதையின் தழுவலாகா இருப்பதால் நீங்கள் முன்கூட்டியே யூகித்துவிடுவீர்கள் எனவே முதலில் எனதுகதை  பின்னர் அவரது கதை தொடர்கிறது.


அழகான சீன வாஸ்து பொம்மைகளை துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் அந்த வாஸ்து கடையில் வேலை செய்யும் குமரன். ஒரு வாடிக்கையாளர் வந்தவுடன் , விவரிக்க ஆரம்பித்தான். ''இந்த பச்சை டிராகனை கிழக்கில் வைத்தால் நீங்கள் விரைவில் கோடீஸ்வரர்..வெள்ளைப் புலி மேற்கில்  , சிவப்பு பீனிக்ஸ் தெற்கில் , கருப்பு ஆமை வடக்கில் வச்சுப் பாருங்க சார் சீக்கிரம் நான் சொன்னது நடக்கும்'' .வாடிக்கையாளர் வாங்க விழையும் போது,
எங்கிருந்தோ வந்த கூட்டம்  , 'எங்க ஆளக் கொன்னுட்டாங்க ,கடைய மூடுங்கடா ' என்று திபு திபு என கத்திக் கொண்டே ஓடியது...வேறு வழியில்லாமல் சடுதியில் கடை சட்டர்  இறக்கப் பட்டது. 'இன்னைக்காவது சம்பளம் வாங்கிட்டு வாங்க , அப்பதான் ராவுக்கு சோறாக்க முடியும் என்று மனைவி சொன்னது குமரனின் மனதை பிராண்ட ஆரம்பித்தது!

இப்ப நம் வாத்தியார் எழுதிய கதை;
எப்படி தான் தமிழ் சினிமா இயக்குனர்கள் ஒன் லைனில் கதை சொல்லி தயாரிப்பாளர்களை மடக்குகிறார்களோ தெரியவில்லை...கேபிள் அண்ணனிடம் கேட்க வேண்டும் .

அப்பறோம் சுஜாதவை எனக்கு நேரில் பழக்கமே இல்லை ,ஒரு கல்லூரி விழாவில் தூரத்தில் இருந்து பாத்ததோட சரி ...உங்களை வரவழைக்க நான் செய்த யுக்தி , தவறாகப் பட்டால் மன்னியுங்கள் நண்பர்களே. 

Monday, July 1, 2013

அது நடந்தே விட்டது!

அன்பு நண்பர்களே , இது ஒரு தகவல் பதிவு …உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம் …

நான் முன் ஒரு பதிவில் ,  மைக்ரோசாப்டின் கிநேக்ட்   என்னும் விளையாட்டு சாதனத்தின் மோசன் கண்ட்ரோல் சென்சர் உதவியுடன் எவ்வாறு  டி வீ  யை ரிமோட் இல்லாமல் வெறும் உடல் அசைவில் மூலம் எவ்வாறு சானல்களையும் , சத்தத்தை குறைப்பது மற்றும் கூட்டுவது  , செய்ய முடியும் என்று ஒரு நண்பர் செய்யும்  வீடியோவை  ஒரு பதிவில் பகிர்ந்து ,  அது போல் விரைவில் சந்தைக்கும் வர வாய்ப்புள்ளது என்று கூறியிருந்த ஞாபகம் .

இன்று வழக்கம் போல் ,  யூடுபில்  மேய்ந்து கொண்டிருந்த போது , அவர்கள் தீடிர் என்று படத்தின் இடைவெளியில் போட்ட ஒரு விளம்பர  விடியோவை , பார்த்தவுடன் , ஆகா இவள்ளவு சீக்கிரமாவா என்று ஆச்சர்யப் பட்டுப் போனேன்…. நீங்களும் அந்த வீடியோ வை இந்த இணைப்பில் பாருங்கள் …ஒரு ஆக்சன் புல் வீடியோ …. இன்னும் கொஞ்ச நாளில் , நீங்கள் உங்கள் வீட்டு நிகழ்வுகளை உடனடி லைவாக , யாருடனும் டிவி வாயிலாகவே பகிர்ந்து கொள்ளலாம் …. ஒரு காலத்தில் வீடியோ கான்பாரன்சுக்கு பட்ட லோல் களை நினைக்கும் போது ,  ஒரு பேமஸ் வசனம் தான் நினைவிருக்கு வந்தது …  Technology has improved a lot yaar!  இதோ அந்த வீடியோ , முழுதும் பாருங்கள் ….

Samsung Motion Control TV

Sunday, June 2, 2013

என்னை அறியாமலே!

அது என்னவோ தெரியல , நம்மக்கு ரொம்ப வயசாகலன்னக் கூட , ஒரு காலத்தில் கருப்பு வெள்ளைக் கால பாடல் என்றாலே காத தூரம் ஓடிய நான் 
அவ்வப்போது சில கருப்பு வெள்ளைக் கால பாடல்களைக் கேட்கும் போது , அட அட என்னமா எழுதி பாடியிருக்காங்க அப்படின்னு தோணும்.

அப்படி சமீபத்தில் தோன்றியது ரெண்டு பாடல்கள்.

முதலில் ,  சமீபத்தில் சூது கவ்வும் பாடலில் வந்த , 'இதுவும் கடந்து போகும்' என்ற பழைய பாடல் படத்தின் இறுதி கட்டத்தில் இயக்குனர் சேர்த்திருப்பார் . இதற்கு முன் இதைக் கேட்டதில்லை. ஆனால் அதைக் கேட்டபோது அட ஆமால்ல , என்னமா அனுபவிச்சி எழுதி இருக்காங்க அப்படின்னு  தோணியது. ஏனென்றால் , அது நிதர்சனமான உண்மை. உங்கள் வாழ்வில் மிகப் பெரிய இன்பம் வந்தாலும் , அல்லது பேசாம செத்துரலாமா என்று மன உளைச்சலில் இருந்தாலும் , இந்த மூன்று வார்த்தையை உளமார நம்புங்கள் , ஆம் அதுதான் 'இதுவும் கடந்து போகும்'.

இதைப் பற்றி கூகுளிடம் கேட்டபோது , பார்வையில் விழுந்தது இந்த பேச்சு...


 நீங்களும் கொஞ்சம் கேளுங்கள் ,  அருமையான பேச்சு, இது உண்மை.

அப்புறம் இன்னொரு பாட்டு....இந்த காதல் பாட்டு ...நானும் இசைப் புயலில் இருந்து , தமன் , ஜிப்ரான் மற்றும் ரகு நந்தன் வரை கேட்பவன் தான் , ஆனாலும் இந்த பாடலை , இரவு பத்து  மணிக்கு மேல் , இங்கே உள்ள யெப்  எம் இல் கேட்டபோது , சுகம் சுகம் ....நன்றி வணக்கம்.


Friday, May 31, 2013

நீங்க நல்லவரா , கெட்டவரா?

என்ன நண்பர்களே , தலைப்பு நாயகன் படத்த நினைவு படுத்துகிறதா ?
சரி , இந்த பதிவு அப்படி  கொஞ்சம் கோக்கு மாக்கா இருக்கும் , அப்பீட்டு  ஆகணும்னா இப்பவே ஆகிக்கோங்க.

விஷயம் என்னன்னா , நீங்க நல்லவரா கெட்டவரான்னு அடுத்தவுங்க உங்கள தீர்மானிக்கிறது எந்த ஒரு விசயத்தையும் நீங்க எப்படி பாகீறீங்க அப்படின்றத வச்சுதான் .  அவங்க தீர்மானம் பல சமயம் தப்பா தான் இருக்கும் , ஆனா என்ன பண்றது , நாம ஒருத்தர ஒருத்தர் அண்டி இருக்கனும் அப்படின்னு வர்றப்ப , நாம தப்பு பண்ணவில்லைன்னா  கூட சில சமயம் அவிங்க சொன்னா நாம குற்றவாளி கூண்டுல ஏறித்தான் ஆகணும் இல்லைங்களா ...

பாருங்க , நான் வேல செய்ற இடத்துக்கு போற வழியில இப்படி தான் ஒரு கடை வாசலில் ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தேன். அத நான் ஒரு அர்த்தம் எடுக்கப் போயி ,என் கூட வேலை பாக்குறவன் என்ன அசிங்கமாப்    பாக்குற மாதிரி ஆகிப் போச்சு பாருங்க.

மொதல்ல ஒரு உதாரணம் .சொல்றேன்  இப்ப கீழ இருக்குற படத்தப் பாருங்க

மேல உள்ள படத்துல மொதல்ல ,எது உங்க கண்ண உறுத்துது ...  அதுல இருக்குற அந்த சின்ன கருப்பு புள்ளியா இல்ல மிச்ச இருக்குற வெள்ளை பகுதியா ?

நீங்க புள்ளிய கண்ணு வச்சா , நீங்க எல்லா விசயத்துல இருக்குற பெரும்பான்மையான பாசிடிவ பாக்காம நெகடிவ மட்டும்தான் பாக்குற ஆளாம் ....பாருங்க ஒரு புள்ளிய வச்சு  பய புள்ளைக நம்மளப் பத்தி சோசியம் சொல்ல ஆரம்பிக்ராயீங்க வெளங்குமா.

சரி விசயத்துக்கு வருவோம்.  நான் வேலைக்கு போற வழியில இருந்த விளம்பரம் இது தான் . அது ஒரு வாட்ச் வெளம்பரம். அந்த விளம்பரத்துல , ஒரு வெள்ளைக் கார பொண்ணு சும்மா டக்கரா , செக்சியா போஸ் கொடுக்குது , கையில ஏகப் பட்ட வாச்சுங்க ...ஆனா பாருங்க அந்த விளம்பரப் பலகியில  கொட்டை எழுத்துல ஒரு வாக்கியம் , அது இது தான் ;இப்ப இத நீங்க படிக்றீங்க , உங்க மனசுல என்ன ஓடுது ....ஒரு ஆங்கில கெட்ட வார்த்த தானே ...நானும் அப்படிதான் நெனச்சு சொன்னேன் ...அதுக்கு தாங்க எனக்கு ஒரு கெட்ட பேரு ....அவன்  நீ ஏன் அந்த மறைக்கப் பட்ட எழுத்த இப்படி நெனைக்க கூடாது ,

FIND ME I'M FAMOUS

அடங்கொன்னியா  எப்படிலா யோசிக்ரானுங்கப்பு ...
.
இன்னொரு சேதி ...ஒரு பொடியன் வந்தான் , சரி அவனுக்கு நாலு வார்த்த நல்லது சொல்லி நல்லவனாகலாமின்னு , ' டேய்  தம்பி , உனக்கு எது வேணும்னாலும்  பிரபஞ்சதுக்கிட்ட கேளுடா , உனக்கு கெடைக்கும் , பெரியவங்கல்லாம்  சொல்றாங்க ' அப்படின்னு சொன்னேன் ...அந்த பய புள்ள , அத அர கொறையா கேட்டுபிட்டு , ஒரே ஓட்டமா ஓடுனான் .

ஒரு அரைமணி நேரம் கழிச்சி திரும்பி வந்தான் ....வந்தவொன்னே , போன்னே நீ ஒரு பெரிய கெட்டவன் அப்படி இப்படின்னு வைய ஆரம்பிச்சுட்டான் . பையன ஆறுதல் படுத்தி என்னன்னு கேட்டா , பய புள்ள , பிரபஞ்சம் அப்படின்னு சொன்னத  சரியா புரியாம , பக்கத்து தெரு பிரபா அப்படிங்கிற பொண்ணுகிட்ட போயி , உன்கிட்ட கேட்டா என்ன வேணாம் கெடைக்குமாம் , ஐ லவ் யூ  அப்படின்னு சொல்லி செருப்படி வாங்கிட்டு வந்திருக்கான் ....என்னத்த சொல்ல போங்க ...சரி நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா ...தயவு செய்து தெரியலயேப்பா  அப்படின்னு மட்டும் கம்மென்ட் போடாதீங்கண்ணே .

நன்றி வணக்கம்.

Wednesday, May 29, 2013

தலைக்காவேரி காணோம்..

 சமீபத்தில் நான் மிக நீண்ட காலமாகவே போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த , கர்நாடகாவில் உள்ள கூர்க் என்ற கோடைவாசாத் தலத்திற்கு போயிருந்தேன்.

நல்ல மிதமான குளிர் , எங்கு பார்த்தாலும் காப்பி தோட்டங்கள், ரம்மியமான இயற்கை சூழல் என்று நன்றாகத்தான் இருந்தது. சரி சுத்தி என்ன பார்க்கலாம் என்று விசாரித்த போது , ஒரு பாக்கேஜ் ஆக சொன்ன இடங்களில்  'தலைக்காவேரி' என்ற இடமும் இருந்தது.

சரி , இவிங்க தான் நம்மக்குத் தண்ணி தரமாற்றயீங்க , அட்லிஸ்ட் அது வர்ற இடத்தயாவது பாப்போமின்னு கிளம்பினோம். வழியெல்லாம்  சிந்தனை , அது ஒரு நீர் வீழ்ச்சியா  இருக்கும் .என்ற நெனப்பில் , வெய்யக் காலமா போறமே , தண்ணி வருமா என்று . அப்புறம் எனக்குள் ஒரு ஆறுதல், ச்சே காவேரி எவ்வொளவு பெருசு , தஞ்சாவூறு  ஜில்லாவுக்கே தண்ணி பாச்சுற  , ஊரு கட்டாயம் நெறைய தண்ணி விழுகும் , நாம நல்லா பாக்கலாமின்னு...

ஒரு ஐம்பது கிலோ மீட்டர் கார் பயணத்திற்கு பிறகு அங்கே போய்ச்சேர்ந்தோம். நல்ல மலை சூழ்ந்த இடத்தில கோவில் போன்ற தோற்றத்துடன் பெரிய  அகண்ட படிகளாக இருந்தது அந்த இடம், சரி உள்ளதான் அருவி எங்கயோ இருக்கும் போல என்று , அந்த படிகளில் ஏறி நடந்தோம் சுற்றி இருந்த மலைகளை ரசிதுக்கொண்டே.கொஞ்ச தூரத்திற்குப் பிறகு , ஒரு குளம் மாதிரி சுத்தி படிக்கட்டுகளுடன் இருந்தது கொஞ்சம் தண்ணி. அதைச் சுற்றி பலர் பூசை செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று அந்த குளத்தை எட்டிப் பார்த்தோம். அங்கே தண்ணியைப் பாத்தவுடன் அதில் காசெரியும் நல்ல பழக்கம் தவறாமல் பின் பற்றியிருந்தார்கள் பலர் என்பதைக் கண்டுணர்ந்தோம்.இவ்வளவு தானா என்று சந்தேகத்துடன்  சுற்றிப் பார்த்தால் , சிறிது தூரத்தில் ஒரு மலை உச்சியை நோக்கி செங்குத்தாக கல் படிக்கட்டு போய்க் கொண்டிருந்தது. அதில் பலர் மெதுவாக ஏறிக் கொண்டிருந்ததைக் கண்டதும் , கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தது போல் ஒரு மகிழ்ச்சி எங்களுக்குள் ஏற்பட , அந்த படிக்கட்டுகளை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

எப்படியாவது அந்த மலை உச்சியை அடைந்து , காவேரித் தாயை கண் குளிர தரிசிப்போம் என்று ஆவலுடன் ஏறத் தொடங்கினோம். சில பல படிகள் ஏறியவுடன் மூச்சு வாங்க ஆரம்பித்தது. நாம வேற பல்க் பாடியா போயிட்டதுநால , ஒரே தஸ் புஸ்.

அப்போதான் அது கண்ணில் பட்டது , அதைப் பார்த்தவுடன் , அடடா நம்ம தமிழ் ஆளுக கைவண்ணமா இந்த படிக்கட்டுகள் என்று ஒரு மகிழ்ச்சி , அதே சமயத்தில் அது மனதையும் பிசைந்தது. பாலா படத்தின் பரதேசியும் ஞாபகத்திற்கு வந்தது.  எப்படி அந்த படம் , சாதாரணக் கூலித் தொழிலாளிக்கும் , கார்பொரட்ட்டில் வேலை செய்பவருக்கும் பொருந்தியதோ, அதே போல் தான் இதுவும்.

அது என்னவா ...சொல்றேன் ....அது வேற ஒண்ணுமில்ல ,அந்த கல் படிக்கட்டில்  , தமிழில் ஒரு வாக்கியம் ,அந்த படிக்கட்டு வேலை செய்த தொழிலாளியால் செதுக்கப்பட்டிருந்தது. அது,

'சாமி எங்களுக்கு இன்னும் நெறைய கல்லு வேல கெடைக்கனும் '

கொஞ்சம் நெனச்சிப் பாருங்க , நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நாமெல்லாம் என்ன கொம்பிடுறோம் சாமிகிட்ட , 'சாமி இருக்குற வேலைய விட பெரிய சம்பளமா வேலை கெடைக்கணும் , இல்லன்ன , ரெசசன் அது இதுன்னு சொல்லி தூக்கிடாம  , வேலை ஓடனும், இல்லன்ன  என் பிசினஸ்  நல்லா வளர்ந்து , இன்னும் லாபம் வரனுமின்னு தான'. இந்த தொழிலாளியும் பாவம் தன் வேண்டுதலா  இப்படி எழுதி வச்சிருக்கிறாரு ...அங்க இருக்குறப் படியப் பார்த்தப்ப ,அவர் வேண்டுதல கடவுள் நிச்சயம் நிறவேதிட்டாருன்னு தெரிஞ்சது , அவ்ளோவு படிங்க.ஒரு வழியா மேல போனா , சுத்தி மலைகள் , கண்ணுக்கெட்டிய தூரம் வரை பறந்து விரிந்த காட்சி பரவசமாக்கியது. மனதில் தோன்றியது ஒவ்வொரு கடின உழைப்புக்குப் பின்னால் ஒரு சுக உணர்வு இருக்குமே அந்த பரவசம் எங்களுக்கு. ஆனாப் பாருங்க , தேடி தேடித் பார்த்தோம் , ஒரு அருவி கூட கண்ல தெம்படல.


எங்கே தேடுவேன் , காவேரிய எங்கே தேடுவேன்  என்று பாடிக் கொண்டே , வந்த வழியாக இறங்கி மறுபடியும்  குளத்துக்கே போயி , எங்கள் விசாரணையை ஆரம்பித்தோம். அதில் கிடைத்த தகவல்...அந்த குளம் தான் தலைக் காவேரி.  மற்றும் அது குளம் அல்ல , அது ஒரு தண்ணீர் ஊற்று ..அந்த ஊற்றுதான் சிறுக சிறுக பெருகி ஓடி , அவ்வளவு பெரிய ஆறாக மாறி , நம் தமிழ் நாடு வரை வருகிறது என்று ...இயற்கையின் ஆச்சர்யமே என்றும் புதிர் தானே...

நன்றி வணக்கம்.

Saturday, May 25, 2013

முருகனைக் கூப்பிட்டு

கணீர் பாடகர் டி எம்  சௌந்தர் ராஜன் அவர்களுக்கு , இறைவன் உங்களை அழைத்துக் கொண்டான் ....ஆனால் நீங்கள் பாடிய பாடல்கள் இங்கயே இருக்கும் , தமிழ் மக்கள் உள்ளவரை ....


முருகனைக் கூப்பிட்ட நீங்கள் முக்தி அடைய வேண்டுகிறேன் ...

எத்தனை  முருகன் பாடல்கள் ....


அட அட அட !!!

எனக்கு சில சமயம்  லாரிகளிலும் , ஆட்டோக்களிலும்  எழுதி இருக்கும் தத்துவம்  ரொம்ப பிடிக்கும்...அதே போல் தான்  T சர்ட்களிலும் ....

ஒரு T சர்ட்டில்  நான் படித்த வாசகத்தின் தமிழலாக்கம் ;

பெண்களைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ள  புரிந்து கொள்ள
நான் என் வீட்டு  நாயை அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளேன்...

பெண் வாசகிகளே மன்னித்து சிரித்துக் கொள்ளவும் , என் மனைவி அதைத்தான் செய்தாள்  இதை சொன்னவுடன்.

நான் ஆண் , பெண் என்று பேதம் இல்லாமல் அவர்கள் போட்டிருக்கும் டி சர்ட்டின் வாசங்களைப் படித்தாலும் , பெண்கள் போட்டிருக்கும்  டி சர்ட்டைப் படிக்கும் போதெல்லாம் , என் மனைவி டெர்ரர் ஆகிறாளே , ஐயோ ராமா ....

இன்று தின மலரில் பார்த்த படம் இது ;


இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?

இந்தப் பதிவின் தலைப்பில் தந்தை (நம்மக்கு தாத்தா?) பெரியார் எழுதியது போல் ஒரு புத்தகம் படித்தேன். நாம் இருக்கும் இக்காலத்தில் , ஆங்காங்கே சாதிக் கொடுமைகள் இருப்பதை நாம் கண்ணுற்றாலும் , பெரும்பாலும் நமக்கு இன்னல்கள் சுதந்தரத்திற்கு முன் இருந்தது போல் அவ்வளவு கொடுமையாக இல்லை என்பதே என்  கருத்து. ஏன் என்றால் அந்த காலத்தில் எவ்வளவு கொடுமையாக இருந்தது என்று இந்த புத்தகத்தில் , கல்கண்டு புத்தக பாணியில் , பாயிண்ட் பாயிண்டாக எழுதியிருந்த சம்பவங்கள் , வயிற்றை கலக்கியது , நல்ல வேளை , பெரியாரும்  மற்றும் அவரின் ஆதரவாளர்களும் உண்மைலேயே புரட்சி செய்திருக்கிறார்கள் என்பதை மனசாட்சி மற்றும் மனிதத்துவம் நெஞ்சில் கொண்ட எவரும் மறுக்க முடியாதென்பது என் திண்ணமான கருத்து.

அந்த புத்தகத்தில் நான் படித்த சில ஆச்சர்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்;

1925 க்கு முன்பு காந்தி அடிகள் தமிழ் நாட்டுக்கு வரும் போதெல்லாம் , மைலாப்பூரில் இருந்த சீனுவாச அய்யங்கார் வீட்டிற்கு உள்ளே செல்லாமல் திண்ணையில் தான்
உக்கார்ந்திருப்பராம்(உக்கார வைக்கப் பட்டிருக்கிறார் ). காந்திக்கே இந்த நிலைமை ?

இராசாராம் மோகன் ராய் , வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது, தங்களைத் தவிர வேற யாரும்  படிக்கக் கூடாது என்று காரணம் காட்டி , பார்ப்னர்கள் அதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேலை கேட்டு மனுச் செய்த நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஓர் டாக்டருக்கு தென்னங் கன்றுகளை வாங்கிக் கொடுத்து , குலத் தொழிலை செய்யச் சொன்னாராம் திர்வான்கூர் சமஸ்தான திவான் ராமசாமி அய்யர்.

கீழ்ச்சாதி  என்று சொல்லப் பட்டவர்கள் அரசாங்கத்துக்கு சம்பளமில்லாமல் வேலை செய்யவேண்டு என்று 1814 இல் திருவிதாங்கூர் அரசாங்கம் சட்டமே போட்டதாம்.

1916 இல் சென்னைக்கு படிக்க வந்த பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு தங்க விடுதி இல்லை , பெரும்பாலனா ஹோட்டல்கள் பார்ப்பனர் நடத்தியதால் அவர்கள் அங்கே உணவருந்தவும் அனுமதிக்கப் படவில்லை.

சென்னையில் கீழ்பாக்கம் மருத்துவ மனையில் ,பார்ப்பன மன நோயாளிகளுக்கு தனிப் பிரிவாக சிகச்சை வழங்கப் பட்டதாம்.


 இன்னும் நெறைய இருக்கு அதுல , முடிஞ்சா தேடித் பிடித்துப் படியுங்கோளேன்.

இந்தக் கொடுமைகள் எல்லாம் குறைந்தபின் என்னை பிறக்க வைத்த
ஈசனுக்கு நன்றி.
 
யாரும் ஆத்திரத்தில திட்டிபுடாதீங்க , அந்தக் காலத்தில் ஒடுக்கப் பட்டவர்களில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் உங்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் - put youself in their shoes.

நன்றி மீண்டும் வருக!

Thursday, May 23, 2013

வில்லாதி வில்லனும் , ஒரு நாயரும்,நாதஸ்வர சீரியலும்!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து என் தற்போதைய நாட்டிற்க்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எதுக்கும் இருக்கட்டும் என்று மூன்று மணி நேரம் முன்னமே சென்றதால் , அங்கும் இங்கும் விமான நிலையத்தினுள் அலைந்து நேரத்தை கொலை செய்து கொண்டிருந்தேன்.  அப்போது என் கண்ணில் பட்டது , ஹிக்கின் பாதம்ஸ் , சரி கொஞ்ச நேரம் , புத்தகம் மேயலாம் என்று உள்ளே சென்றேன். 

மேய்ச்சலின் போது ஞாபகம் வந்தது , நம் கவிபேரரசு வின்  'ஆயிரம் பாடல்கள் ' புத்தகம் வாங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தது , என் அதிர்ஷ்டம் , அந்த புத்தகம் அங்கே இருந்தது ...விலை ஆறு நூறாக இருந்த போதிலும் வாங்கிக் கொண்டேன் , அந்த வைர முத்துவுக்காக...

அதில் ஒவ்வொரு சினிமா பாடல் எழுதும் முன் , எந்த கதைச் சூழ் நிலைக்காக அந்த பாடல் படத்தில் இடம் பெற்றதென்பதை முதலில் விவரித்து பின் பாடல் வரிகளை தொடுத்திருந்தார்கள் ...

அதை மேல் வாரியாக வாசித்த பொழுது , ஒரு படத்தின் பாடல் கண்ணில் பட்டது. அது சத்யராஜ் முதலில் இயக்கி நடித்த ,வில்லாதி வில்லன் என்ற மொக்கப் படத்தின் பாடலுக்கான சூழல் ... அதற்கான அறிமுக வரிகள் இவ்வாறு தலைவர் எழுதி இருந்தார்;

வாய்மொழியை மூலதனமாக கொண்ட வழக்கறிஞர் ஒருவரின் சமூக விமர்சனம் என்பதே பாடலுக்கான சிச்சு வேஷன்.

அதற்காக கவிஞர் எழுதிய 'வாய்மையே வெல்லும்' என்று தொடங்கும் பாடலில் , ஒரு சரணத்தைப் படித்தவுடன் , அன்று காலை பெங்களூருவில் இருந்து பஸ்ஸில் வந்தபோது கேட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது , முதலில் அந்த சரணம் ;

பொண்ணும் ஆணும் திருமணம் செய்வது 
ப்ரோக்கர் கொண்ட வாயாலே - பின் 
ஆணும் பெண்ணும் பிரிந்து வாழ்வது 
அவரவர் கொண்ட வாயாலே

அந்த பஸ் சம்பவம் என்னவென்றால் , என் பின் சீட்டில் ஒரு அப்பாவும் ,பையனும் இருந்தார்கள். அந்த அப்பா பையனுக்கு பொறுமையாக சாப்பிட ஏதோ கொடுத்துக் கொண்டிருந்தார். பின் அவருக்கு வந்த போன் காலில் இருந்து அவர் சம்சாரித்ததை வைத்துதான் அவர் ஒரு பாலக் காட்டு நாயராக்கும் என்று தெரிந்து கொண்டேன்.

முதலில் வந்த காலில் அவர்கள் மலையாளத்தில் சம்சாரித்து கொண்டதில் நான் கிரகித்து கொண்டது ;  இந்த மலையாளிக்கும் அவர் மனைவிக்கும்  ஏதோ தகராறு , விவாகரத்து வரை நீண்டு விட்டது போல ,  கூப்பிட்டவர்  இருவருக்கும் சொந்தம் போல , அதனால் இவர் அவரிடம் ,  'இந்த பிரச்சனிக்கு மூல காரணம் என் மனைவி யின் அம்மாதான் , என் மனைவி என்னிடம் வந்து சேர்வாள் என்று நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்' என்று பேசினார் அந்த நாயர்.

கொஞ்ச நேரம் கழித்து வேறு ஒரு அழைப்பு வந்தது , இம்முறை , நாயரின் சொந்தம் போல ;
நாயர் அவரிடம் , 'என் மாமனார் ஒரு முக்காக் கிறுக்கன் ,அவன் மனுசனே இல்ல என்று ஏதோதோ சொல்லிவிட்டு , என் லாயர் எப்படியும் என் மகன் என் கஸ்டடியில் வர வழி செய்வதாக சொல்லி இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ...

அந்த அழைப்பு முடிந்தவுடன் , அந்த பய்யன் பேச ஆரம்பித்தான் ..அவன் பேசுவது ஒரு பெண் குழந்தை பேசுவது போலவே இருந்தது ...அதுவும் நடிகை சாலினி சிறு வயதில் கொஞ்சிப் பேசுவாளே அதுமாதிரி ...அந்தப் பய்யன் கொஞ்சியது ....

அப்பா சென்னையில் மால் இருக்குமா ...
ஓ  பெரிய பெரிய மால் இருக்கே -அவன் அப்பா நாயர் 
என்ன கலரில் இருக்கும்ப்பா ...
எல்லா கலரில் இருக்கும் ...
பிங்க் கலரில் இருக்குமா ...
இருக்கும்...
அச்சனும்  அம்மையும் கல்யாணம் செய்தப்ப , அம்மை போட்டிருந்த சேலை கலரில் இருக்கும்மா  என்றான் சிறுவன் ;
இருக்கும் ,உனக்கு எப்படித் தெரியும் அந்த கலர் ...
நான் வீடியோ  வுல பார்த்தேன் ...
யார் காமிச்சா ...
அம்மா பாட்டி ..
அவங்க கூட இனிமே பேசாத , அவங்க நல்லவங்க இல்லை.

எனக்கு அந்த சிறுவன் அம்மாவை மிஸ் பண்ணுவது மட்டும் புரிந்தது.  நாயரின் நடவடிக்கைகள் அவர் ஒரு பேசத் தெரிந்த காரிய வாதி என்பதும் புரிந்தது...நான் நினைக்றேன் , நாயருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை வந்ததே , நான் மேல குறிப்பிட்ட பாடலில் தலைவர் எழுதிய பின் வரும் மற்றொரு சரணத்தின் கருப் பொருளே காரணம் என்று ;


மண்ணில் மனிதன் பிறப்பது மட்டும் 
மாதா என்னும் தாயாலே - பின் 
நன்மை தீமை இரண்டும் அடைவது 
 நாக்குத் துடிக்கும் வாயாலே 


மேலும் நாதஸ்வரம் சீரியலில் வந்த இந்த காமடியும் கூடவே நினைவுக்கு வந்தது, பாருங்கள் அந்த காமடியை இங்கே;நாக்கின் துடுக்கு எவ்வளவு கொடுமை செய்யும் என்று நன்கறியலாம் இந்த காணொளியின் மூலமாக.

அப்புறம் சும்மா சொல்லக் கூடாது , தலைவர் வரிகள் ஒவ்வொரு பாட்டுக்கும் சூப்பர் , அவர் நல்ல வரிகள் எழுதியும் பல பாடல்களில் இசை அம்முக்கி விடுவதால்  அதை நம்மக்கு இந்த மாதிரி அச்சில் படிக்கும் போதுதான் அதன் அருமை தெரிகிறது.

கவிஞர் மறக்காமல் , தன்னை சினிமாவில் அறிமுகப் படுத்திய இளையராசவுக்கும் , பாரதி ராசாவுக்கும் , நன்றியை தெரிவித்த பாங்கும் பிடித்திருந்தது ; அதே சமயத்தில் இளையராசா ஆணவத்துடன் , வெறும் பாடல் வரிகளில் என்ன இருக்கு , என்று வைரமுத்துவை மாகிங் செய்து அவர் போல் பேசி அவரையே தாழ்த்திக் கொண்ட வீடியோ கிளிப்  நினைவிற்கு வந்து தொலைத்தது

Wednesday, May 1, 2013

பஸ்ஸ கொழுத்துங்கடா!

அன்பு நண்பர்களே , இது ராமதாஸ் நியூஸ் சம்பந்தமான பதிவு அல்ல...ஆனால்  நம் தமிழ் மக்கள் எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பதற்கு என் வாழ்வில் நடந்த ஒரு விசயத்தின் பதிவு....

இந்த பதிவை எழுதத் தூண்டியது , தற்போது ராமதாஸ் கைதால் , பொதுமக்களுடன் பஸ்ஸை கொழுத்த முற்பட்டதாக இன்று சுடச் சுட படித்தவுடன் என் நினைவு கொசுவர்த்தி சுத்த ஆரம்பித்துவிட்டது...

நான் வேலைக்கு சேர்ந்து முதன் முதலில் வாங்கிய காசில் , ஒரு நல்ல  BPL ஸ்டீரி யோ  வாங்கி , இசைப் புயல் பாடல்களை சுவாசித்துக் கொண்டிருந்த காலம் அது...பின்னர் அந்த வேலை என் படிப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாததால் அதனை விட்டு விட்டு , என் மூட்டை முடிச்சுகளுடன் , என் சொந்த ஊரை நோக்கி பயணப் படத் தொடங்கினேன்...

நான்    ஆசைப்பட்டு வாங்கிய அந்த செட்டை மிக கவனமாக அதன் அட்டைப் பெட்டியில் வைத்து , இறுக கட்டி , புதுசா   கட்டிகிட்டவன் பொண்டாட்டிய பத்திரமா அழைத்துப் போவானே , அது மாதிரி  அலுங்காம  குலுங்காம , பஸ்ஸில் கொண்டு போய்க் கொண்டிருந்தேன்...

எண்ணத்தில் பல கனவுகள் ,  என் வீட்டைச் சேர்ந்தவுடன் , நன்றாக சத்தமாக பாட்டை வைத்து அடுத்த வீட்டுக் காரனை நோக வைக்க வேண்டுமென்று ...ஏனென்றால் அவன் நான் சிறுவனாக இருந்த பொழுதிருந்தே , அவ்வாறு சத்தமாக பாட்டைப் போட்டு , எங்களை வெறுப்பேத்தியவன் ,  நமக்கு இப்போழ்து காலம் கனிந்து விட்டது என்று , சிறுபிள்ளையாக எனக்குள்ளே புளகாங்கிதம் அடைந்து கொண்டே பயணப்பட்டுக் கொண்டிருந்தேன்.

நான் சென்ற பேருந்து ஒரு வழியாக பாண்டியில் இருந்து மதுரை வந்தடைந்தது.  அங்கிருந்து எங்கள் ஊருக்குச் செல்ல , ஒரு தனியார் வண்டியில் ஏறினேன்.  அப்போதெல்லாம் , தனியார் வண்டியில் தான் நல்ல எபக்டுடன் பாடல்கள் அலற விட்டுக் கொண்டே வேகமாக செல்வார்கள் , எனவே சீக்கிரம் என் பொக்கிசத்தை வீட்டில் கொண்டு சேர்த்து விடலாம் என்ற நப்பாசையில் அதில் ஏறினேன், எனக்கு ஆப்பு காத்திருக்கிறது என்று தெரியாமலே! என் ஆசை இசைப் பெட்டியை , ஓட்டுனர் அருகே , என்ஜின் பக்கத்தில் உள்ள இடைவெளியில் யார் காலிலும் படக் கூடாதென்று , பத்திரமாக வைத்து விட்டு , டிரைவர் சீட்டின் பின்புறம் உள்ள சீட்டில் , இசைப் பெட்டி என் கைக்கு அருகில் வாகாக இருக்குமாறு அமர்ந்து கொண்டே தேவுடு காக்க ஆரம்பித்தேன் ...

அந்த மதுரை டூ  ...  வண்டி -ஒரு படத்தின்   தலைப்பு கூட இதே தான்    ,எங்கள் ஊரை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் -   விரைவாகப் போய்க்கொண்டிருந்தது என் எண்ணங்களின் வேகத்திற்கு ஈடாக ...

வண்டி மதுரை பல்கலையைத் தாண்டி ,  கருமாத்தூர் நோக்கி சீரிய வேகத்துடன் செல்ல, தீடிரென்று காச் மூச்சென்ரு பின்பக்கம் ஒரே சத்தம் , 'எல
டைவரு , வண்டிய நிறுத்துடா' என்று, என்னவென்றால் அங்கிருந்த ஒரு சிறிய    ஊரில் , இரண்டு நபர்கள் இறங்க வேண்டுமாம் ...நம்ம டிரைவர் பதில் சொன்னார் , ' எ இது பாய்ண்டு  டு பாயண்டுரா , இங்கெல்லா நிறுத்தமாட்டேன் என்று வண்டியை ஓட்டத் தொடங்கினார் .. விடவில்லை அந்த இருவரும் , மதுரை பாசையில் டிரைவரை வய்யத் தொடங்கி , ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து , வண்டியின் முன்னே வந்து வலுக் கட்டாயமாக , வண்டியை நிறுத்த வைத்தார்கள் ...

நான் என்ன ஆகப் போகுதோ என்று பார்த்துக் கொண்டிருக்க , அந்த கிராம ஆட்கள் , சத்தமிட்டு மேலும் பலரை அழைக்க , அந்த ஊர் கூட்டம் , எங்கள் பஸ்ஸை  நோக்கி ஓடி வர ஆரம்பித்தது...எங்கள் பஸ்  டிரைவர் , இறங்கி , அங்கிருந்து வயக்காட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார்...

அந்த தீடிர் கும்பல் வண்டியில் நுழைந்து , ஒருவன் ஸ்டீரிங்கை பிடித்து சீட்டில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்யத் தொடங்க , இன்னொருவன் , நான் அவ்வளவு நேரம் பாதுகாப்பாக வைத்திருந்த , என் ஆசை இசைபெட்டியின் மேல் நின்று கொண்டு கத்தினான் , 'எல்லாரும் மரியாதையா  இறங்கி ஓடுங்க , எங்க ஊர்ல நிக்காத வண்டிய கொழுத்தப் போரம்' என்று மிரட்ட ஆரம்பிக்க , உள்ளே உக்கார்ந்திருந்த சனம் எல்லாம் , துண்டக் காணோம் , துணியக் காணோம் என்று இறங்கி ஓடத் தொடங்கினார்கள்.

எனக்குள் ஒரே குழப்பம் , நான் ஆசையாக வாங்கிய அந்த இசைப் பெட்டியை விட்டு எப்படிச் செல்வதென்று , அதன் மேல் அவன் நடராசராக நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கையிலே ,  சரி என்னதான் ஆகுது பாப்போம் என்று இருக்க ,  அந்த நல்லவன் ஒரு வழியாக என் பெட்டியில் இருந்து இறங்கி , பயணிகளைத் துரத்துவதில் மும்முரமாக , நான் இதுதாண்டா சான்சு என்று, பல்க்காக இருந்த அந்த இசை பெட்டியை தூக்கிக் கொண்டு , அந்த பச்சை விட்டு இறங்கி , மற்ற பயணிகளுடன்  ஊரை விட்டு நாடகத் தொடங்க , அந்த ஊர் மக்கள் ஒரு வழியாக நாங்கள் பயணித்த பஸ்ஸை வயக்காட்டை நோக்கி  செலுத்தத் தொடங்கி இருந்தார்கள் ....

நான் வடிவேல் பாணியில் , 'ஆகா கொஞ்சம் விட்டுருந்தா  உசுரோட கொழுத்தி  இருப்பாயிங்க , தப்பிசொமுடா சாமி ' என்று ஒரே ஓட்டமாக அந்த ஊரை விட்டே ஓடி ,  அடுத்து வந்த கவருமெண்டு பஸ்ஸை நிறுத்தி , மற்ற பயணிகளுடன் பயணித்து ஒரு வழியாக என் ஊர் போய்ச் சேர்ந்தேன்.

அது என்னமோ தெரியல , நாம ஒரு விசயத்துல எந்த தப்பும் நடக்கக் கூடாதின்னு ரொம்ப கவனமா இருந்தக் கூட , விதி எப்படில்லாம் நம்மக்கு போக்கு காட்டிடுது பாருங்க ....எப்படியோ பயங்கரமான  அனுபவம்யா...

நன்றி கலந்த வணக்கம் இவ்வளவு நேரம் படிச்சதுக்கு ...நாமெல்லாம் உப்பைக் கொரைக்கனும்யா ,எல்லாம் ரத்தக் கொதிப்புதான் காரணமின்னு நினைக்கிறேன்  இந்த மாதிரி திடீர் கொந்தளிப்பு ஆர்பாட்டங்களுக்கு  குறைவே இல்லாத நம்ம தமிழ் நாட்டுல....