Saturday, November 19, 2011

நீங்கள் கோடீஸ்வரன் ஆக ஈசியான வழி!

அந்த பிரபல ஆங்கில நாளிதழில் , வரி விளம்பரங்களுக்கு நடுவில் அந்த விளம்பரம் கட்டம் கட்டப்பட்டு , கண்ணை கவர்ந்தது. 


'பணக் கஷ்டத்தில் கவலைப்படுகிறீர்களா? சம்பாரிக்கும் பணம் போதவில்லையா? அதிக பணம் சம்பாரிக்க வேண்டுமா?  எங்கள் செமினாருக்கு வாருங்கள், பணம் பண்ணும் வித்தை கத்து தரப்படும். நுழைவுக் கட்டணம் ரூபாய் பத்து மட்டுமே.'


"சரி வெறும் பத்து ரூபாய்க்கு  என்னதான் சொல்லிதராங்க போய் பார்ப்பமே" என்று போனேன். அந்த talk நடந்த இடம் ஒரு ஹோடேலில் இருந்த பெரிய கான்பெரென்ஸ் ரூமில். அந்த ரூமின் வாசலில் ஒரு டேபிள் வைத்து ,அதில் அந்த Money Guru எழுதிய புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளாக விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. ஒரு முப்பது அல்லது நாற்பது என்னைபோன்ற ஆடுகள் அந்த பேச்சை கேட்டு கோடீஸ்வரன் ஆவதற்கு ஆவலுடன் காத்திருந்தோம்.  ஒரு வழியாக அந்த Money Guru மேடைக்கு வந்து மைக்கைப் பிடித்தார். 

முதலில் அவரை அறிமுகப்படுத்தும் ஒரு சிலைட் காண்பித்தார் திரையில். அதில் அவர் பெயருடன் MBBS, FRCS அப்புறம் வேற என்னவோ டிப்ளோம போட்டிருந்தது. அவர் , தான் ஒரு பிரபல டாக்டர் என்றும், லண்டனில் FRCS முடித்தவர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். தான் காலப் போக்கில் பல பணம் பண்ணும் வித்தைகளைக் கற்று, தான் பார்த்த மருத்துவத் தொழிலை விட்டு விட்டு , தான் கற்ற வித்தைகளை மக்களிடம் பரப்பும் உன்னதமான வேலையை முழு நேரத் தொழிலாக மாற்றிக் கொண்டதாக சொல்லி எங்களையெல்லாம் 'புல்' அரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

அப்புறம் ஒரு அஞ்சு நிமிசத்துக்கு பணத்தின் அருமை பெருமைகளை சொல்லி உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருந்தார். அதாங்க மூளை சலவை செய்றதுன்னு சொல்லுவாங்களே. நானும் ,சரி இந்தா சொல்லுவாரு அந்தா சொல்லுவாரு அப்பிடின்னு , காது ரெண்டையும் தீட்டி வச்சு உக்கார்ந்திருந்தேன். நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தவர் ,டக் என்று கேழே உள்ள படத்தை ஸ்க்ரீனில் காட்டினார்."உங்கள் வீட்டிலும் இந்த ஐஸ்வர்யா காளியின் பாதம் பட வேண்டுமா ?  " என்று கேட்டார்.

எல்லோரும் 'ஆமாம்' என்று தலையை மந்திரிச்சு விட்ட ஆடாக ஆட்டினோம் பலமாக.

உடனே அவர் உதவியாளர்கள் எங்கள் எல்லோருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார்கள்.


Money Guru பேச ஆரம்பித்தார்.
"உங்கள் கையில் இருப்பது , நான் ஸ்பெஷல் ஆக , கல்கத்தா காளியின் பாதங்களில் வைத்து பூஜித்து , அதில் என்னோட பவரை எல்லாம் ஏற்றி உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். இதை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களை தேடி ஐஸ்வர்யா வந்து விடுவார் என்றார்.(? !!)அடுத்து இந்த வாஸ்து பகவானின் படத்தை காட்டி , நமக்கு தெரிந்த ஈசானி மூலை, வாயு மூலை என்று மேம்போக்காக சொல்லிவிட்டு, இனிமேல் தான் உங்களுக்கு செல்வந்தர் ஆவது  எப்படி என்று சொல்லப் போகிறேன் என்றார்.

வந்திருந்த அனைவரும் உச்ச கட்டத்தை அடையப் போகும் மகிழ்ச்சியில் , கவனமாக அவரை பார்க்க:

அன்புடையீர், நான் சொல்லித்தரப் போகும் வித்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகள். அதனைப் பயன் படுத்தி பல பேர் கோடீஸ்வரன் ஆகியுள்ளார்கள். இதனை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாதென்பதால் ,  நான் இதனை கட்டண அடிப்படையில் சொல்லித் தரபோகிறேன்.

இன்று மதியமும் , நாளை மதியமும் நீங்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். இதற்கான கட்டணம் வெறும் ஆயிரம் ரூபாய் தான்" என்றாரே பார்க்கலாம்.

  'ஆஹா , இவர் நாம பணக்காரன் ஆவதற்கு வழி சொல்லுவாருன்னு பார்த்தா , அவர் ஆகுறதுக்கு சொல்றாரே " அப்படின்னு சுதாரிச்சு அங்க இருந்து ஓடி வந்துட்டேன்.

வர்றப்ப தான் அந்த ஒரு ரூபாவ பார்த்தேன் , அந்த நாணயம் புகை படிஞ்சி ரெண்டு பக்கமும் கருப்பா இருந்துச்சு.  சரி எதுக்கும் இருக்கடுமின்னு பர்ஸ்ல கொஞ்ச நாளா வச்சுருந்தேன்.

ஒரு நாள் , வெளியூருக்கு போய் விட்டு, அங்கே இருந்த பெட்டிக் கடையில் ஏதோ வாங்கிவிட்டு , பணம் கொடுக்கலாமென்று பார்த்தால், சரியாக ஒரு ரூபாய் குறைந்தது.

வேறு வழியில்லாமல் அந்த கருகிய ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தேன்.
அதை வாங்கிப் பார்த்த கடைக்காரர் ,
"சார் வேற காசு கொடுங்க சார் " என்றார்.
"ஏங்க, சிங்கம் தெரியுது பாருங்க, இது செல்லும்ங்க "
"சார், இதப் பாத்தா சுடுகாட்டுல இருந்து எடுத்துட்டு வந்த மாதிரி இருக்கு, எனக்கு வேண்டாம் , வேற கொடுங்க "

என் மனதில் தாரை தப்பட்டை மேளத்துடன் பிணத்தின் நெத்தியில் இருந்த ஒரு ரூபாய் நாணயம் அப்போது தான் நினைவுக்கு வந்தது.5 comments:

  1. அடுத்த நாளே, நீங்களும் வேறொரு ஏரியால, இதே போல ஒரு மீட்டிங் போட்டிருந்தா, நீங்களும் பணக்காரர் ஆகி இருக்கலாமே!!!

    ReplyDelete
  2. @Mohamed Faaique
    ஆமாங்க , அப்ப அந்த ஐடியா தோணல..அப்புறம் நம்ம வடிவேலு ஒரு படத்துல இத வச்சு காமெடி பண்ணுன பிறகு தான்
    நம்மக்கு யோசனை வந்தது ச்சே மிஸ் பண்ணிட்டோமோன்னு...

    ReplyDelete
  3. ஆனா அந்த ஒரு ரூபாவை ரொம்ப நாளா பர்சிலே கொண்டு திரிஞ்சிருக்கிறீங்களே... உங்களை நான் என்னவென்று சொல்ல... உண்மையை சொல்லுங்க!! ஒர் ஆசைதானே அந்த ஐஸ்வர்ய காளி வந்துடுவாளோன்னு?

    ReplyDelete
  4. // என் மனதில் தாரை தப்பட்டை மேளத்துடன் பிணத்தின் நெத்தியில் இருந்த ஒரு ரூபாய் நாணயம் அப்போது தான் நினைவுக்கு வந்தது.

    அதேதான்...

    ReplyDelete
  5. @ஷர்மி
    ஆமாம் ஆசை யாரை விட்டது?

    @சந்தானம் as பார்த்தா
    வாங்க நண்பரே!

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)