Thursday, July 25, 2013

பேய் இருக்கிறதா இல்லையா?

மனிதனின் பிரதான உணர்ச்சிகளில் ' பயம்' ஒரு  முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் யாரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. அதிலும் 'பேய்' பயம் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த 'பயத்தை' வைத்து எத்தனையோ பேர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாய்வழிக் கட்டுக்கதைகள் , எத்தனை சினிமாக்கள் , புத்தகங்கள் , பில்லி , சூன்யம் மாந்த்ரீக வேலைகள் என்று இந்த பேயை வைத்துத்தான் வித விதமான வியாபாரங்கள்.  சிங்கப்பூர்  ஒரு சிறிய நாடென்றாலும் இங்கும் தினமும் எண்ணற்ற பேய் கதைகள் உருவாகிக் கொண்டுதான் உள்ளன.  "Singapore Ghost Stories" என்று ஒரு புத்தகமே போட்டு  பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  புதிதாக வீடு வாங்குபவர்கள் , கிரகப் பிரவேச பூஜை செய்வதோடு நிறுத்தாமல் , பேய் ஓட்டும் சிறப்பு நிபுணர்களை கொண்டு வந்து பேய் ஓட்டுவதையும் மறக்காமல் செய்து விடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் கட்டடங்களில் வசிப்போருக்கு ஏற்படும் பொதுவான பேய் அனுபவம் என்னவென்றால் , நடு  இரவில் , அவரவர் தங்கியிருக்கும் வீட்டின் மேல் தளத்திலிருந்து 'டொக், டொக்' என்று மெலிதாகத் தட்டும் சத்தம்.  இதனை என் பல நண்பர்கள் அனுபவித்து  சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் கேட்டிருக்கிறேன். "எவண்டா இந்த நேரத்துல லூசுத் தனமாத் தட்டிக்கிடுருக்கான்" என்று  படுத்துவிடுவது என் பழக்கம். ஆனால் சில நண்பர்கள் பயத்தில் வீட்டையே காலி செய்துவிட்டு வேறு வீடு பார்த்துக் கொண்டதையும் கேள்விப்பட்டுள்ளேன்.

இந்த பேய் பயம் , பொதுவாக நாம் பள்ளிப் பருவத்தில் இருக்கும் போது தான் நமக்குள் சக மாணவர்கள் சொல்லும் கதைகளை வைத்து கருவாகி பின் உருவாகிறது என்றால் மிகையாகாது.
நான் பள்ளியில் படிக்கும் போதெல்லாம் , 'தலையில்லா முண்டம்' ஊருக்குள் சுத்தி வருகிறது என்று ஒரே பயம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.  சரி அந்தக் காலத்தில் தான் அப்படி என்றால் , இப்போதும் இது மாதிரி பள்ளிகளில் அவ்வப்போது யாரவது எதையாவது கிள்ளிப் போட்டு அது எல்லாக் குழந்தைகள் மனதிலும் கிலி உண்டாக்குவதை கேள்விப்படும்போது அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

சமீபத்தில் கூட என் மகள் பள்ளி போய்விட்டு வந்து ஒரே அழுகை. என்னவென்று கேட்டபோது, 'ஏதோ பிறந்த குழந்தை ஒன்று பேசியதாகவும், நான் சிறு பெண்களைக் கொன்று ரத்தத்தைக்  குடிக்கப் போகிறேன்' என்று சொன்னதாக யாரோ பீலா விட்டு , தமிழ் நாடே அல்லோகலப் பட்டதை கேள்விப் பட்டு இருப்பீர்கள்.

என்னடா பேய் இருக்கிறதா , இல்லையா என்று பட்டி மன்றத் தலைப்பை விட்டு விட்டு என்னமோ மொக்கை போடுறானே என்று யோசிகிறீர்களா, முதலில் நான் சிறு பிள்ளையாக இருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சொல்லிவிடுகிறேன். அதனை வைத்து பேய் இருக்கிறதா , இல்லையா என்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.

என் அப்பா பாட்டி மற்றும் தாத்தா ,  கேரளாவில் உள்ள 'கஜனாப் பாறை' என்ற இடத்தில் ஏலக்காய் தோட்டம் வைத்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் அப்பா தன்  அம்மாவைப் பார்க்க புறப்பட்டபோது  சிறுவனான என்னையும் கூட , அவரின் அலுவலக ஜீப்பில் அழைத்துக் கொண்டு போனார். இந்த கஜனாப் பாறை , மூணாறு போகும் வழியில் உள்ளது , எங்கு பார்த்தாலும்  ஏலத் தோட்டம் அல்லது தேயிலைத் தோட்டம் என்று பார்க்க அழகாக இருக்கும்.

போடியிலிரிந்து மூனாறு சென்றவர்களுக்குத் தெரியும் , அந்த பாதை எவ்வாறு பாம்பின் உடல் போல் வளைந்து நெளிந்து மேலே செல்லும் என்று. பெரும்பாலான  சமயங்களில் ஒரே குண்டும் குழியுமாக இருக்கும் தமிழக எல்லையான போடிமெட்டுவை அடையும் வரை. போகும் வழியில் ஒரு சிறு அருவி கூட உண்டு, மழைக் காலத்தில் வெள்ளிக் கம்பி போல் நீர் வீழ்வது பார்க்க நன்றாக இருக்கும்.

ஒரு வழியாக அதில் பயணித்து என் பாட்டி  வீட்டை அடைந்து, அளவளாவி , விருந்து உண்டு , மாலையாகி விட்டது. அலுவலக ஜீப்பில் வந்ததால் அன்றே திரும்ப வேண்டும் என்றும் அப்பா கிளம்பத் தொடங்கினார். நானும் அரை மனதுடன் அவருடன் கிளம்ப வேண்டியதாயிற்று மறு தினம் பள்ளிக்குப் போகவேண்டும் என்பதால்.

நாங்கள் அங்கிருந்து கிளம்பியபோதே மெதுவாக இருட்டத் தொடங்கும் வேளை. நான் சொன்னமாதிரி இருட்டில் அந்த மழைப் பாதையில் ஓட்டுவது சிரமம் என்பதால் போக்குவரத்து மற்றும் ஆள் நடமாட்டம் மிக மிக அரிது. இருந்தாலும் வேறு வழியில்லை ஊருக்குத் திரும்பியே ஆக வேண்டும் என்பதால் , வண்டி சீரான வேகத்தில் அந்த வளைந்து நெளிந்த பாதையில் இறங்கிக் கொண்டிருந்தது.

கால்வாசி தூரம் இறங்கும் முன்னரே , ஆதவன் மறைந்து , நல்ல கும்மிருட்டாக இருந்தது. என் நினைவில் மேல் நோக்கி எந்த வண்டியும் ஏறிப் போனதாகத் தெரியவில்லை. எங்கள் வண்டியின் பின்னாலும் எந்த வண்டியும் வருகிற மாதிரியும் அறிகுறி இல்லை. வண்டி நடுக் காட்டில் போய்க் கொண்டிருந்தது. சுத்தமாக மனித , வாகன நடமாட்டம் அற்ற இடத்தில் வண்டியில் நாங்கள்.


நான் வண்டியின் முன் விளக்கு பாதையைத் தாண்டி வீழ்ந்து வழி காட்டுவதை வேடிக்கைப் பார்த்து கொண்டே ஜீப்பின் பின் சீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் , அப்புறம் அந்த இருட்டில் பொழுது போக்க  வேறு வழி?

அப்போதுதான் அது நடந்தது. ஒரு வளைவில் எங்கள் ஜீப் திரும்பும் போது வண்டியின் முன் விளக்கு வெள்ளிச்சம் பட்டதில் நான் அந்த உருவத்தைப் பார்த்தேன். அது ஒரு பெண் உருவம் தனியாக நின்று கொண்டிருந்தது. அது ஒரு நடுத்தர வயது பெண்மணி. அவள் மூக்கில் இருந்த தங்க மூக்குத்தியில் விளக்கு வெளிச்சம் பட்டு டால் அடித்தது. இப்போது நினைத்தாலும் அந்த  முகம் என் நினைவில் ஒரு சில்லிப்பை  தோற்றுவிக்கிறது.  அது விட்டலாசார்யார் படங்களில் வருவது போல் , முடியை விரித்துப் போடவில்லை. நார்மாலக ஒரு பெண்மணியாகவே இருந்தது. அதனால் எனக்கு அப்போது ஒன்றும் தோணவில்லை.

ஒரு வழியாக எங்கள் ஜீப் அடிவாரத்தை அடைந்து , போடியை நோக்கி செல்லத் துவங்கும் வேளையில் , திடீர் என்று ஒரு டயர் பஞ்சர் ஆகி விட்டது.  டிரைவர் கொஞ்சம் ஸ்லொவ் செய்து விட்டு , ஸ்டெப்னி வேறு இல்லை , நகருக்குச் செல்ல இன்னும் கொஞ்ச நேரம் தான் என்று வண்டியை ஒருவாறு அட்ஜஸ்ட்  செய்து ஓட்டத் தொடங்கினார்.  அப்போதும் எனக்கு என்றும் தோணவில்லை.

இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக டிரைவருக்குத்  தெரிந்த வொர்க்ஷாப்பில் வண்டியை நிறுத்தி , பஞ்சர் பார்க்கச் சொன்னார் டிரைவர். பஞ்சர் வேலை நடக்கும் போது , என் அப்பா , மெதுவாக பேச்சை  ஆரம்பித்தார். 'டிரைவர் , நீங்க வழியில  ஒரு பொண்ணு கிராஸ் ஆச்சே பாத்தீங்களா ? " என்று .  அவர் , 'இல்ல சார் நான் எதுவும் பாக்கலியே ' என்றார்.  நான் முந்திரி கொட்டைபோல் , 'நான் பார்தேன்ப்பா ' என்றேன்.  அப்போது அந்த பஞ்சர் ஓட்டுபவர் , 'எந்த இடத்துல வச்சு பாத்தீங்க சார்' என்று என் அப்பாவை கேட்க, அவர் இந்த மாதிரி ஒரு வளைவுக்குப் பக்கத்தில் பார்த்ததையும் , சுற்றி கண்ணுக் கேட்டிய தூரம் வரையில் வீடு எதவும் இருந்த மாதிரி தெரியவில்லை என்றார் என் அப்பா.  அந்த பஞ்சர் கடைகாரர் , எந்த இடம் அது என்று மூளையை கசக்கி கேள்வியாக கேட்டு ,
'ஒ அந்த புலியூத்து அருவி பக்கம் இருக்கிற வளைவா  சார் , அது ஒரு டேஞ்சரஸ் வளைவாச்சே   சார், போன  வாரம் கூட ஒரு பஸ் ஆக்சிடெண்ட் , ஜீப் ஆக்சிடென்ட் ஆச்சு , அப்படி இப்படின்னு பொழுதண்ணிக்கும் ஆக்சிடன்ட் சார் அங்க , ஒரு வேளை நீங்க பார்த்தது பேயா கூட இருக்கலாம் ' என்று மெல்ல கொழுத்திப் போட்டார். என் அப்பாவும் , 'நல்ல வேலை  எங்க டிரைவர் பாக்கலை , அவர் பாட்டுக்கு வண்டிய நிறுத்தி விசாரிசிருந்தா என்ன  ஆயிருக்குமோ ' என்று அவர் பங்குக்கு சொல்லி , என் பேய் பயத்தை கப்பென்று நெஞ்சில் பச்சக் என்று ஓட்ட வைத்து விட்டார்.

அன்றிலிருந்து எனக்கு அவ்வப்போது பேய் பயம் வருவதுண்டு இரவில் தனியாக இருக்கும்போது , குறிப்பாக கல்யாணத்திற்கு முன்பு வரை. கல்யாணத்திற்கு பிறகு இல்லையா என்று கேட்குறீங்களா?

எப்படி இருக்கும் அதான் ஒரு பேய்  கூடவே வாழ்க்கை நடத்துரனே!

ஐயோ!!!!!!!!!!!!! அம்மா கொல்றாலே !!!!!!!!!!!! ( என் மனைவி இந்த பதிவை எழுதும் போது பார்த்துவிட்டாள் )நான் முன்னர் எழுதிய மற்றொரு பேய் அனுபவத்தையும் படியுங்கள் :   காஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ ?


நன்றி மீண்டும் வருக!2 comments:

  1. எந்தப் பேய் இருக்கோ...இல்லையோ...?
    அந்தப் பேய்......
    அதுதான் காமப் பேய் இருக்கு...உண்மைதானே?

    ReplyDelete
  2. பேய் இருக்கா இல்லையா என்பது தான் கேள்வி, நீங்கள் உங்கள் அனுபவத்தை சொல்லிவிட்டீா் ஆனால் கேள்விக்கான பதில் வேண்டும்.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)