Monday, November 21, 2011

கடலை போடுவோருக்கு சமர்ப்பணம்!

"சார் முடிவா என்ன சொல்ல வர்றீங்க?" - சீட்டின் நுனியில் பாதி உக்காந்து உட்காராமல் அருள்.
"இத பாரு அருள் , நீ என் மகள் திவ்யாவ ரெண்டு வருசமா காதலிச்சி இருக்கலாம். அதுக்காக வேலை இல்லாத உனக்கு என் பெண்ணை கட்டி வச்சி, அவ வாழ்க்கை  மோசமாக அமைய நான் சம்மதிக்க மாட்டேன்,நீ போகலாம்" - திவ்யாவின் அப்பா வேதாசலம்.

"சரி,திவ்யாவ வெளிய வரச் சொல்லுங்க,நான் அவ கிட்ட பேசணும்".
"அவ இங்க இல்ல, அவள பாட்டி வீட்டுக்கு போகச் சொல்லிட்டேன்".
"சார்,ஏன் பொய் சொல்றீங்க,நான் அவ மொபைல் எடுக்காம வெளிய எங்கயும் போகமாட்டான்னு எனக்கு நல்லாத் தெரியும்." என்று டிவி யின் அருகில் 'கை'  போன்ற அந்த செல்போன் ஸ்டாண்டில் அவள் போன் இருப்பதை சுட்டிக் காட்டினான்.

திவ்யா வேறு வழியில்லாமல் சமையல் கட்டில் இருந்து வெளியில் வந்து அப்பாவின் அருகில் தயங்கி நின்றாள்.
 "திவ்யா,உனக்கே தெரியும், நான் இவ்வளவு நாள் ஒரு சாப்ட்வேர் கம்பனியில் குப்பை கொட்டிட்டு, சரி நானே ஒரு கம்பனி ஆரம்பிக்கலாம்மின்னு தான் அந்த வேலைய விட்டேன். ஆனால் அதுவே நம்ம காதலுக்கு தடையா இருக்குமின்னு நினைக்கலே" - அருள்.

திவ்யா ஒன்றும் சொல்லாமல் அவனையே  பார்க்க,அருள் தொடர்ந்தான்:

"நான் நிச்சயம் சொந்தமா ஒரு சாப்ட்வேர் கம்பனி வச்சு பெரிய ஆளா வருவேன்,உங்க அப்பா கிட்ட சொல்லு திவ்யா"

திவ்யா என்ன சொல்வது என்று தெரியாமல் அவனையும் ,அப்பாவையும் மாறி மாறி பார்த்தாள். அப்பாவும் , அம்மாவும் நேற்று இரவு கதறியது நினைவில் வர,
"அருள், எங்க அப்பா சொல்றது கரெக்டுன்னு தோணுது,என் வாழ்க்கை வசதியா இருக்கனுமின்னு எங்க அப்பா எதிர் பார்க்குறதில தப்பில்ல" - திவ்யா

அருளுக்கு 'சுர்' என்று கோபம் வர, "ச்சே இவ்வளவு நாள் உன்கூட பழகி, உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சதா நினச்சேன், இப்பதான் தெரியுது,உன்னப் பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியலன்னு, குட் பை" என்று அதற்கு மேல் அங்கே நின்றால் தனக்கு தான் பெரிய அவமானம் என்று 'சட்' என்று அங்கிருந்து கிளம்பினான்.

   ----((((--------------))))--------------(((----------)))-------------

சில வருடங்களுக்குப் பிறகு, அருள் எதிர்பார்த்தபடி, சொந்த கம்பெனி ஆராம்பித்தாலும், சினிமாவில் வருவது போல் ஒரே பாட்டில் பெரிய முதலாளியாக ஆவதெல்லாம் சுத்த 'ஹம்பக்' என்று பட்டு புரிந்து கொண்டான். அவனுக்குத் தெரிந்த ஒருவர், 'நம்ம ஊருக்காரர் ஒருத்தர் இங்க ஜவுளி வியாபாரத்துல கொடிகட்டி பறக்குறாரு, நீ அவரப் போயி பாரு ' என்று அவனை போகச் சொன்னார். அந்த தொழில் அதிபரின் அப்பாயின்ட்மெண்டு கிடைக்க, மறு நாள் காலைக்காக காத்திருந்தான்.

அருள் தயங்கி தயங்கி அந்த தொழில் அதிபரின் வீட்டில் நுழைந்தான். அங்கே அந்த தொழில் அதிபர் ,  தரையில் உக்காந்து சாப்பிட்டுக் கொண்டே, 42 இன்ச் LED டிவியில் ந்யூஸ் பார்த்துக் கொண்டிருந்தவர், இவனைப் பார்த்தவுடன், "வாயா அருள்,அப்படி சோபாவுல உக்காரு ,இதோ வர்றேன்" என்று கை காட்டினார்.

அந்த தொழில்அதிபர் நேராக விசயத்திற்கு வந்தார்:
"தம்பி, நம்ம கடைங்கள்ள ஆகுற வியாபாரத்துக்கு  பில் போடுறதுக்கு ஒரு சாப்ட்வேர் வச்சு இருக்கோம்.அதுல சில மாறுதல்கள் பண்ணனும், முடியுமா?"
"நிச்சயம் முடியும் சார்,என்ன மாறுதல் செய்யணும் சார்"
"கள்ளக் கணக்கு எழுத வைக்கணும்"
"புரியலையே சார்"
"அதாவது கஸ்டமருக்கு ஒரு பில், ஆனா அதுல இருக்குற தொகைய குறைச்சு காமிக்ராப்ல இன்னொரு பில்"
"சரி சார் பண்ணித் தர்றேன்" என்று மிச்ச விவரங்களையும் பேசி முடித்து தன் ஆபிசுக்கு திரும்பினான்.

"ஏன் இப்படி செய்யச் சொல்றாரு" என்று மூளையை கசக்கியவனுக்கு, கொஞ்சம் தாமதமாகத் தான் புரிந்தது, "ஓ, டாக்ஸ் தில்லு முல்லா,இப்படி தான் எல்லாரும் பெரிய பணக்காரன் ஆகுரான்களா".

   ----((((--------------))))--------------(((----------)))-------------


சிறிது நாட்களுக்குப் பின், தொழில்அதிபர் வாயெல்லாம் பல்லாக, "தம்பி ,பரவாயில்ல நான் எதிர்பார்த்த விட சீக்கிரமா பண்ணிடீங்க, நம்ம ஊர்காரைங்கன்ன சும்மாவா" என்று சொல்லியவாறே, கணிசமான தொகையை அவன் வேலைக்கு சம்பளமாக கொடுத்தார். அதுமட்டுமில்லாமல், தன் நட்பு வட்டாரத்தில் அவனை 'ரெக்கமன்ட்' செய்ய, அருளின் சாப்ட்வேர் நிறுவனம், வெகு சீக்கிரத்தில் வெற்றி நடை போடத் தொடங்கியது.

ஆபிஸ் விரிவாக்கம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக, ஜானை வேலைக்கு சேர்த்தான். ஜானின் MBA மூளையால், மேலும் மேலும் அருளின் நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் டாப் கியரில் செல்லத் தொடங்கியது. ஜானிடம் எல்லா நிர்வாக பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, Technical விசயங்களில் மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டான் அருள்.

ஒரு நாள், ஜான், கதவைத் தட்டிவிட்டு, அருளின் அறையில் நுழைந்தான்.
"சார், நம்ம ஆபீஸ் ல லேடி ஸ்டாப் யாருமே இல்ல" ஸ்ட்ரைடாக ஆரம்பித்தான் ஜான்.
"ஆமா , நான் தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல, லேடிஸ்களப்  போட்டா,இங்க வேல செய்யற மத்த ஆம்பளைங்க, தேவையில்லாம அவங்ககிட்ட வழியுறது,அப்புறம் லஞ்சு சாப்பிட வெளிய  கூப்பிட்டு போறது, காப்பி குடிச்சி வெட்டி அரட்டையின்னு ஆரம்பிச்டுவீங்க,அதெல்லாம் நம்ம கம்பனிக்கு வேண்டாம்"
"இல்ல சார், அட்லீஸ்ட்  ரிசப்சன்ல ஒரு பெண்ணை போடுறது தான் சார் நல்லா இருக்கும், இதுவரைக்கும் ரிசப்சனிஸ்ட்ன்னு யாரையும் நாம போடல,நம்ம கம்பனி ஸ்டாப்களே மாறி மாறி கவனிச்சுக்க வேண்டி இருக்கு"
ஜானின் தொடர் தொல்லையினால் அருள் சற்றே மனம் இறங்கி "சரி ஏதாவது பண்ணித் தொலை , நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என்று அவனை அனுப்பி வைத்தான்.

   ----((((--------------))))--------------(((----------)))-------------

ஒரு வாரத்திற்குப் பிறகு, அலுவலகத்தில் நுழைந்த அருளுக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை, ரிசப்சனில் திவ்யா. அவளைப் பார்த்ததும் பழைய ஞாபகங்கள் அவனைத் துரத்த, அவளின் குட் மார்னிங் -ஐ சட்டை செய்யாமல் அவன் அறையில் நுழைந்தான். இவ்வாறே பல நாள் ஓடிக் கொண்டிருந்தது.

அவன் பிரத்யோக அறையில் நுழைந்த அருள் , இண்டர்காமில் ஜானை வரச் சொன்னான். ஜான் வந்தவுடன்,
 "ஜான், நம்ம கம்பனி மூலமா ஒரு பெரிய சாப்ட்வேர் ப்ரொடக்ட் தயாரிக்குற ஐடியாவுல இருக்கேன். நம்ம பாலன்ஸ் சீட் காமிக்கச் சொன்னனே"
"சார் இதோ இருக்கு சார்"
"அதை மேய்ந்த அருள், நம்ம கிளையண்ட்ஸ் கொடுக்கவேண்டிய பணமே நெறைய இருக்கும் போல, சீக்கிரம் கலக்ட் செய்ய ஏற்பாடு செய்ங்க,அதே மாதிரி யாரார் கிட்ட இருந்து எவ்வளவு பணம் வரணும்ங்கற லிஸ்ட் கொடுங்க, இந்த ப்ராடக்ட் செய்ய நெறையப் பணம் உடனடி தேவை "
"ஓகே சார்" என்றான் ஜான்.

   ----((((--------------))))--------------(((----------)))-------------

இரண்டு மாதங்களுக்கு பிறகு, அருளின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் திவ்யா.
"இவ எதுக்கு இங்க வந்தா,இவகிட்ட தான் நாம பேசறதே இல்லையே" என்று எரிச்சலுடன் அவளைப் பார்த்து "என்ன விஷயம்"  என்று கேட்டான் அருள்.
"சார் கவலைப் படாதீங்க, நான் ஒரு ரிசப்சனிஸ்ட் ஆ தான் பேச வந்துருக்கேன்" -திவ்யா
"சரி சரி,மேல சொல்லு" என்று தன் இருக்கையில் சரிவாக உக்கார்ந்து கொண்டான் அருள்.
"ஜான் பத்தி கம்ப்ளைன்ட் செய்ய வந்தேன்,டெய்லி காபி சாப்பிட வா,லஞ்ச் ல தனியா பேச வா,அப்படி இப்படின்னு ஒரே டார்ச்சர் கொடுக்கிறாரு,வேலையே செய்ய விடமாட்டேன்கிறாரு"
"சரி நான் கவனிக்கிறேன் நீ போகலாம்" என்று அவளை அனுப்பிவிட்டு, ஒரு வாரமாக ஜானின் நடவடிக்கையை கண்காணித்தான். திவ்யா சொன்னது அப்படியே நடக்க, ஜானை தன் ரூமுக்கு வரவழைத்தான்.

ஜானை கடுமையாக எச்சரித்து , "சரியாக நடந்து கொள்,இல்லை என்றால் வேலையை விட்டே தூக்கி விடுவேன்" என்று அனுப்பி வைத்தான்.

----((((--------------))))--------------(((----------)))-------------

தன் வீட்டில் கடுமையான மன உளைச்சலில் இருந்த ஜான், மன ஆறுதலுக்காக பைபிள் எடுத்து படிக்க ஆரம்பித்தான். அதில் இருந்த ஒரு விஷயம் அவனுக்கு 'டக்' என்று ஒரு ஐடியாவை கொடுக்க,திருப்தியுடன் படுக்கச் சென்றான்.

இரண்டு  நாள் சென்று, அருளின் மேஜையில் ஜானின் ரெசிக்நேசன் லெட்டர் காத்துக் கொண்டிருந்தது. அருள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவன் போயே விட்டான்.

சில நாட்களுக்குப் பிறகு, புதிய மானஜரை வைத்து, கணக்கு சரி பார்க்க,
கஸ்டமர்களிடம் இருந்து வரவேண்டிய பாக்கித் தொகைகள் குறைந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அருள், வங்கி பண இருப்பை சரி பார்க்க, எதிர்பார்த்த பாலன்ஸ் இல்லை.  ஒரு சந்தேகத்தில் தன்னிடம் இருந்த பழைய லிஸ்டுடன், கஸ்டமர்களிடம் கலெக்ட் செய்த விபரங்களை சரி பார்க்க, எல்லோரிடம் இருந்தும் வந்த பணம்,வர வேண்டியவற்றை விட குறைவாக இருக்க, கஸ்டமரிடம் கூப்பிட்டு விசாரித்தான்.

எல்லா கஸ்டமர்களும் ஒரே விசயத்தை ரிபீட் செய்தார்கள் போனில்:

   "உங்கள் மானஜர் ஜானின் கடிதத்தின் படி, நாங்கள் உங்களுக்குத் தர வேண்டிய தொகையில் பாதி தள்ளுபடி செய்வதாகச் சொல்லியிருந்ததால்,
நாங்கள் மீதத் தொகையை மட்டும் செலுத்திவிட்டோம்,இனி நாங்கள் உங்களுக்கு தர வேண்டிய பாக்கி எதுவுமில்லை"

கஸ்டமர்களின் நம்பிக்கையை இழக்க விரும்பாத அருள் அந்த விசயத்தை அதோடு விட்டு விட்டான்.

No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)