Tuesday, November 1, 2011

i-Phone னால் வந்த ஆபத்து!

வெளிநாட்டில் வேலை செய்யும் ராகுல்,விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றான். சொந்த பந்த விசாரிப்புகளை முடித்துவிட்டு ,"சரி, பஜார் போயி ஷாப்பிங் பண்ணிவிட்டு வருவோம்" என்று மனைவி மற்றும் தன் குழந்தை அனுசுயா வுடன் , ஆட்டோவில் சென்று , பஸ் ஸ்டாண்ட் அருகில் இறங்கினான். அப்போது ஒரு வயதான  பெண்மணி அவனைப் பார்த்து , "செயினப் பிடிங்கிட்டு ஓடுறான் ,அவனப் பிடிங்க" என்று கத்தியவாறே தன் முன்னால் ஓடும் ஒருவனைக் கை காட்டியவாறே , ஓடமுடியாமல் பாவமாக ஓடிக் கொண்டிருந்தாள். ராகுல் ஆட்டோ டிரைவருக்கு செட்டில் செய்வதில் மும்முரமாக  இருந்ததால் ,கொஞ்ச நேரத்திற்கு எதுவும் புரியாமல் ,என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றிருந்தான். 

அவன் மனதில் பல எண்ணங்கள், "ச்சே ,படத்துல வர்ற ஹீரோ மாதிரி ,ஓடிப் போயி அந்த திருடன் கால இடறி விட்டு ,ஒரே அமுக்கா அமுக்கிருக்கலாம் ..ஆனா அவன் வாயில பிளேடு வச்சி அத மூஞ்சில துப்பிட்டா ..இல்லேன்னா கத்தி எடுத்து சதக்குன்னு குத்திட்டா என்ன பண்றது , அப்புறம் பேப்பர்ல நம்ம போட்டோ வந்து பெரிய நியூஸ் ஆயிடுமே ...ச்சே ச்சே நம்ம சொந்த ஊரு , சிட்டி மாதிரி இவ்ளவு கெட்டுப்போச்சா ...பாவம் அந்த அம்மா , ஹெல்ப் பண்ண முடியாமப் போச்சே , யாராவது அவனப் பிடிச்சிருபாங்களா..." என்று திரும்பி திரும்பி பார்த்தவாறே தன் ஷாப்பிங் வேலையை தொடரப் போய்விட்டான். 

மேலும் சில நாட்கள் ஊரில் கழித்துவிட்டு ,திரும்பவும் வெளிநாடு வந்து சேர்ந்து அவன் வேலையை பார்க்கத் தொடங்கினான். அவ்வபோது அந்த செயின் திருட்டு நினைவில் வந்து போய்க் கொண்டிருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு:

"அப்பா ,எனக்கு i போன் வாங்கித் தாங்கப்பா,என் பிரண்ட்ஸ் எல்லாம் வச்சிருக்காங்க" - அனுசுயா
"அது ரொம்ப காஸ்ட்லி செல்லம் ,வெறும் நாலாம் கிளாஸ் படிக்குற உனக்கு
  இந்த வயசுல அந்த போன் எதுக்கு ,அப்பாலாம் ,நாலாம் கிளாஸ் படிக்றப்ப, வெறும் ஓட்ட சிலேடு தான் வச்சிருப்பேன் .போன்லா என்னனே தெரியாது " - ராகுல்.
"ஸ்டீவ் ஜாப்ஸ் அப்பவே கண்டுபிடிக்கல, அதான் நீங்க வாங்கல" - அனுசுயா.
"பாருடி, உன் மக உன்னமாதிரியே எடக்கு மடக்கா பேசுறத" என்று மனைவி சௌமியாவை நோக்கி சொல்லிவிட்டு இணையத்தில் குறைந்த விலைக்கு ஐ -போன் கிடைக்குமா என்று மேய ஆரம்பித்தான்.

சரியாக இரண்டு வாரங்களுக்குப்பிறகு,
"அப்பா பரிட்சை முடிஞ்சி லீவ் வருது,எங்க கூட்டுப் போறீங்க" - அனுசுயா.
"போச்சுடா ,அடுத்த செலவ ஆரம்பிச்சிட்டா, உனக்கு ஐ-போன் வேணுமா ,இல்ல டூர் போணுமா?" - ராகுல்
"டூர் போலாம்ப்பா,என்ன மலேசியால இருக்கிற Genting Highlands கூப்பிட்டு போறீங்களா?"
"ஓகே , போகலாம்"  என்று ராகுல் சொன்னவுடன், "என்னங்க ,செலவு கூடிப் போச்சு காசு சேக்கனுமுன்னு சொல்லிட்டு மக கேட்டதும் டக்குன்னு ஏன் சரி சொன்னீங்க ?" என்று குடைய ஆரம்பித்தாள் அவன் மனைவி.
"அடடா ,உங்க ரெண்டு பேருகிட்ட நான் படுற பாடு ,அப்பா சாமி காப்பாத்துடா" என்று கை கூப்பினான்.

ஒரு வழியாக மலேசியா சென்று, மலை உச்சியில் இருக்கும் Genting போவதற்கு , கேபிள் கார் நிலையத்தில் வரிசையில் நின்றார்கள். ஸ்கூல் லீவ் சீசன் ஆதலால் ,நல்ல கூட்டமாக இருந்தது.


ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு , ஆசையுடன் அவர்களுக்கான காரில் ஏறி அமர்ந்தார்கள். அந்த கார் , பசுமையான அந்த மலை உச்சியை நோக்கி நகரத் தொடங்க , பனி மேகங்கள் அவப்போது வந்து ஹாய் சொல்லிவிட்டு செல்ல , ஆர்வத்துடன் மேலும் கீழும் பார்த்து என்ஜாய் செய்து கொண்டிருந்தார்கள். 

அவர்கள் மலை உச்சியை அடையும் பொழுதே , பல வண்ணங்களில் அமைந்த பிரமாண்டமான கட்டடங்கள் வரவேற்றது.கேபிள் காரை விட்டு இறங்கி வரிசையாக இருந்த கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே போன அவர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.


அனசுயாவின் நண்பர்கள் , Gentring-ல் உள்ள Outdoor தீம் பார்க்கை  ஆஹா ஓஹோ என்று புகழ்திருந்ததால் ,அதில் விளையாட வேண்டும் என்றும் கனவோடு வந்தவளுக்கு
அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வெளியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.
கண்ணாடி வழியாகத் தெரிந்த அந்த பார்க்கை கண்ணில் நீர் தழும்ப ஆசையுடன் பார்த்தாள்.


ராகுலும் ,சௌமியாவும்,அவளை சமாதானப்படுத்தி, பரவாயில்ல இன்னொரு தடவ வரலாம்,இப்ப indoor பார்க் என்ஜாய் பண்ணுவோம் வா என்று கூப்பிட்டு கொண்டு போனார்கள். மழையால் வந்திருந்த அனைவரும் அதே முடிவை எடுத்து , ஒரே நெரிசலாக அந்த பார்க்கில் அடையத் தொடங்கினார்கள்.
உள்ளேயும் பல வித அமைப்புகள்,ஹோட்டல்கள்,விளையாட்டுகளால் இருந்ததை கண்டு மகிழ்ந்த அனுசுயா,அங்கிருந்த பெரிய ராட்டினத்தில் ஏற வேண்டும் என்றாள். ராகுலுக்கு அதில் போக பயம் என்பதால்,மனைவி மற்றும் குழந்தைகளை ஏற்றிவிட்டு,கிழே இருந்தவாறே அவர்களை போட்டோ பிடித்துக் கொண்டிருந்தான்.
அப்போது ஒரு உள்ளூர்காரன் அவனை நோக்கி வந்து, ரகசியமாக ஒரு
i -போனை காமித்து , "வேண்டுமா , சல்லிசாக தருகிறேன்" என்றான் ஆங்கிலத்தில். "வேண்டாம்" என்று அவசரமாக மறுத்தான் ராகுல். அவன் போன பின் ,மகள் iPhone கேட்டது ராகுலின் நினைவுக்கு வர ,அதை வாங்கி இருக்கலாமோ என்று யோசித்துக் கொண்டே இருந்த பொழுது , மீண்டும் அந்த உள்ளூர்காரன் ராகுலிடம் வந்து,வாங்கிக் கொள்கிறாயா என்று வற்புறுத்தினான். ராகுல் ஏதோ உள்ளுணர்வு உறுத்த , "வேண்டாம்" என்று மறுத்து விட்டு ,அந்த இடத்தில இருந்து நகர்ந்து மனைவி,மகளை நோக்கி கை அசைத்து , போட்டோ எடுப்பதை தொடர்ந்தான்.
 
ராட்டினத்தை முடித்த மகள், அங்குள்ள Snow வேர்ல்ட்-ஐ பார்த்து போக வேண்டும் என்று அடம் பிடிக்க,வேறு வழியில்லாமல் உள்ளே நுழைந்து ரசித்தார்கள்.
 
 


செயற்கை பனியில் நன்றாக விளையாடிவிட்டு வெளிய வந்த பொழுது, யாரோ ஒருவன்
அவனை நோக்கி தப தப என்று ஓடி வருவதையும் ,அவன் பின்னால் இரண்டு போலீஸ் துரத்தி வருவதையும் பார்த்த 
ராகுல், ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் , தன் அருகில் வந்த குற்றவாளியின் காலை தன் 
கால் கொண்டு இடறச் செய்தான். அதில் தடுமாறிய அந்த குற்றவாளியை ,பின்னால் வந்த போலீஸ் மடக்கி பிடித்து விலங்கிட்டது. ராகுல் அப்போது தான் அவனைப் பார்க்க ,அது அவனிடம் இபோனே விற்க முயற்சி செய்தவன்.
போலிசிடம் விசாரித்த பொழுதுதான் தெரிந்தது , அவன் விற்க முயற்சி செய்தது ஒரு திருட்டு போன் என்று. நல்லவேளை தப்பித்தோம் என்று மன நிம்மதியுடன்,சொந்த ஊரில் மிஸ் பண்ணிய தீரச் செயலை இங்கு செய்ததை எண்ணி 
மகிழ்ச்சியுடன் , "வாங்க லஞ்ச் சாப்பிடுவோம் " என்று அங்கிருந்த காபி டேர்ரசில் நுழைந்து ராஜ உணவை உண்டு களிக்க ஆரம்பித்தான். 

 
  

No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)