Friday, November 25, 2011

பள்ளிக் கூடம் போகலாமா?

அன்புள்ள நண்பர்களே , வாசகர்களே, நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவரோ பள்ளி செல்லும் குழந்தைகள் வைத்திருப்பவர்களா? அந்த குழந்தைகள் படிப்பதை  நினைவு வைக்க ஒரு எளிய டெக்னிக் சொல்லிக் கொடுக்கப் போகிறேன். இந்த டெக்னிக் உங்களில் சில பேருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் , அவர்களுக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு.

அந்த டெக்னிக் சொல்லிக் கொடுக்கும் முன், கொஞ்சம் 'பிளேடு' போட்டுக் கொல்கிறேன். நீங்கலாம் எப்படின்னு தெரியல, நாங்க படிக்குரப்ப , படித்ததை நினைவு வைத்து தேர்வில் வாந்தி எடுக்கும் முறை தான் எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் படித்ததை எப்படி மறக்காமல் வைத்திருக்கலாம் என்று எந்த வாத்தியும் சொல்லிக் கொடுத்ததில்லை. சும்மா மேம்போக்காக 'புரிஞ்சி படி , ஞாபகம் வரும்' என்றே சொல்லுவார்கள். பிரச்சினை என்னென்ன,
'மொதல்ல புரிஞ்சா தான'.  சில சமயம் அப்படியே புரிந்து விட்டாலும் , அதென்ன மாயமோ ,மந்திரமோ தெரியல, பரிச்சையில் ஆன்ஸ்வர் எழுதும்போது மட்டும் சீக்கிரத்தில் வந்து தொலையாது.


நாம் நினைவில் வைத்து நன்றாக எழுத வேண்டும் என்று பெற்றோர் முதல் ஆசிரியர் வரை கையில் எடுக்கும் ஆயுதம் 'பிரம்பு'. அதிலும் எங்கள் பள்ளியில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் பசங்களை அடிக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்பெஷல் ஆக பிரம்பு கொண்டுவருவார். என்ன ஸ்பெசல் என்றால், நல்ல மூங்கில் பிரம்பை எங்கிருந்தோ வாங்கி , அதை எண்ணையில் ஊரப் போட்டு , கொண்டுவருவார். அப்போது தான் அடி சும்மா வீச்சு வீச்சுன்னு விழுமென்று.
இவ்வளவு யோசித்து பிரம்பு தயாரித்த ஆசிரியர் , அந்த நேரத்தை கொஞ்சம் உபயோகமாக செலவழித்து , பசங்களுக்கு எப்படி ஈசீ யா சொல்லித் தரலாம் என்று கொஞ்சம் உக்காந்து யோசிச்சு இருக்கலாம்.

ஆசிரியர் மட்டும் அல்ல, அம்மா ,அப்பா ,எல்லோருமே சொல்லும் சப்பைக் கட்டு, 'அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்', உண்மையில் இதன் அர்த்தம் வேறென்று தெரிந்து இருந்தாலும் , விடாமல் சும்மா வெளுத்து வாங்கிவிடுவார்கள் தம் பசங்கள் படிக்கவில்லை என்றால்.

நேற்று ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி. தென் கொரியாவில் இப்படித் தான் ஒரு அம்மா , தன் மகன் சரியாக மார்க் வாங்கவில்லை என்றால் கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பாள் போலிருக்கிறது. அவள் மகன் பதினெட்டு வயதானவன், சமீபத்தில் நடந்த மாதிரி கல்லூரி நுழைவுத் தேர்வில் எடுத்த ஸ்கோர் அம்மாவின் கண்ணில் பட்டால் அடி பின்னி விடுவாள் என்று , அந்த ஸ்கோரை கொஞ்சம் மாற்றி ஏழு லட்சம் பேரில் , அறுபத்தி ரெண்டாம் இடத்தில் வந்தது போல மாற்றிக் கொண்டுபோய் , பெருமையாக காட்டி உள்ளான். ஆனால் அவன் அம்மாவோ அந்த ரேங்க் பத்தாதென்று அவனை பேஸ் பால் மட்டையிலும்,கால்ப் மட்டையுலும் அடி பின்னோ பின்னியிருக்கிறாள். வெறுத்துப் போன அந்த பய்யன், அவளை கத்தி எடுத்து கொலை செய்து விட்டான். பின் பயந்து போன அவன், கடந்த எட்டு மாதமாக அவள் உடலை தன் படுக்கையின் கீழே மறைத்து வைத்து வந்துள்ளவன் இப்போது போலிசின் கையில்.

என் பக்கத்து வெட்டுப் பெண் சரியாக படிக்கவில்லை என்று , அவளின் பாட்டி விறகுக் கட்டையால் அடிப்பதை நான் கண்டுள்ளேன். 'முருகா , இன்னைக்கி எந்த வாத்தியார் கிட்டயும் , பிரம்படி வாங்கக் கூடாதென்று'  முருகனுக்கு ஸ்பெஷல் பிரையர் செய்து விட்டு பள்ளிக்கு போன நாட்களை நினைத்தால் இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

 எனக்குத் தெரிந்த வரையில் , இப்பொழுதும் பெரும்பாலான பள்ளிகளில் அடிக்கும் முறை முற்றிலும் ஒழியவில்லை. என் எண்ணம் தவறென்றால் , அதற்காக முதலில் மகிழ்ச்சி அடைபவன் நானே. இதை படிக்கும் வாத்தியார்கள் யாராவது இருந்தால், நீங்கள் அவ்வாறு இல்லை என்றாலும் வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் பக்குவமாக எடுத்துக் கூறுங்கள் ,பிள்ளைகளை அடித்து அவர்கள் மனதில் படிப்பை பற்றி ஒரு பயத்தை உருவாக்காதீர்கள். ஏதோ சொல்லுவாங்கள்ள, 'கடவுள் மேல அன்பு இருக்கணும், பயம் இருக்கக் கூடாது'. அது மாதிரி , 'படிப்பு மேல ஆர்வம் வரச் செய்யணும் , பயம் வரச் செய்யக் கூடாது'.

சரி அந்த டெக்னிக் என்னவென்று சொல்லுகிறேன். அதருக்கு முன் ஒரு சிறிய டெஸ்ட். நீங்கள் பின் வரும் வார்த்தைகளை நினைவு வைக்க வேண்டும்.ஐந்து நிமிடம் உங்களுக்கு டைம்.
     சிறுமி
     பானை
     தவளை
     பயம்
      யானை
      பாம்பு
      நாய்
      சிறுவன்
      சைக்கிள்
       கார்
       மரம்
       பழம்
       மயக்கம்
       டாக்டர்

என்ன மனப் பாடம் செய்து விட்டீர்களா? இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி, பழத்துக்கு இரண்டு வார்த்தை முன்னால் என்ன வார்த்தை இருந்தது? சைக்கிளுக்கு அடுத்து வந்த வார்த்தை என்ன?  நீங்கள் 'கார்' என்று பார்க்காமல் சொல்லி இருந்தால் நீங்கள் கெட்டிக்காரர்கள். இருந்தாலும் நான் சொல்லும் டெக்னிக் உங்களுக்கு தெரிந்து இருக்கவில்லை என்றால் , நான் முதலில் கஷ்டப் பட்டதை போல் நீங்களும் கஷ்டப்பட்டு தான் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்பது நிச்சயம்.

சரி ,இதோ அந்த டெக்னிக். கொடுத்த வார்த்தைகளை கோர்த்து உங்கள் சொந்த கற்பனயில் ஒரு கதை உருவாக்குங்கள். உதாரணமாக :

ஒரு சிறுமி தின்பண்டம் எடுபதற்காக பானையில் கைவிட்டாள்.அதிலிருந்து ஒரு தவளை வெளியே தவ்வியது. அவளைப் பார்த்த தவளை பயத்துடன் வெளியே ஓடியது. அப்பொழுது ஒரு யானை அதை துரத்த ஆரம்பித்தது. ஓடிய தவளையை பாம்பு கவ்விப் பிடிக்க ,அந்த பாம்பின் வாலை ஒரு நாய் கடித்தது .
நாயை பார்த்த சிறுவன் சைக்குளுடன் கீழே விழ ,அங்கே வந்த கார் அவன் மேல் மோதாமல் ஒரு மரத்தின் மீது மோதியது. அப்பொழுது மரத்தில் இருந்து ஒரு பழம் டிரைவர் தலையில் விழுந்து அவன் மயக்கமாக , அங்கிருந்த கூட்டம் அவனை டாக்டரிடம் கூட்டிச் சென்றது. 
நீங்கள் உங்கள் குழந்தையை அவர்களாகவே ஒரு கதை உருவாகச் சொல்லவேண்டும் . இல்லையென்றால் உங்கள் கதையை அவர் நினைவு வைக்க தொடங்கி நிச்சயம் மறந்து விடுவார். அப்புறம் 'உள்ளதும் போச்சு லொள்ளக் கண்ணா' தான்.

டிஸ்கி:
இதை எந்த ஒரு பாடத்திருக்கும் உபயோகிக்கலாம். இணையத்தில் இது போல் ஆயிரக் கணக்கான டெக்னிக்குகள் நிறைந்துள்ளன. நடிகை அஞ்சலி ,நடிகர் ஜெய்யை காதல் செய்கிறாரா என்று ஆராய்ச்சியை விட , இதைப் போன்ற விசயங்களுக்கும் கொஞ்சம் நம்ம பிளாகில் எழுதலாமே என்று போட்டுள்ளேன். எப்படி என்று கருத்துச் சொல்லுங்கள் ,அதே சமயத்தில் இந்த டெக்னிக்கை பிறருக்கும் கற்பியுங்கள் ஒகே வா?

4 comments:

 1. நிச்சயம் இது போன்ற டெக்னிக்குகள் தான்
  நினைவாற்றலையோ,படைப்பாற்றலையோ வளர்க்க உதவும்,
  அதை விட்டுட்டு அடிச்சு தான் வளர்க்கனும்னா வளருவது மதிப்பெண் வாங்கும் இயந்திரமாகதான் இருக்கும்.

  ReplyDelete
 2. இந்தப் பதிவுக்கு நான் போட்ட பெரிய கொம்மண்ட்ஸ் என்னாச்சு....??

  ReplyDelete
 3. @Mohamed Faaique
  //இந்தப் பதிவுக்கு நான் போட்ட பெரிய கொம்மண்ட்ஸ் என்னாச்சு....??//
  நண்பரே ஸ்பாம் டேப் பார்த்தேன் , உங்க கமெண்ட் இல்லையே ...என் ப்ளாக் வரதுக்கு முன்னாடி வேற பிளாக் கமெண்ட் போட்டீங்களா?
  ஒரு வேலை அங்க தப்பா போஸ்ட் பண்ணிருக்கப் போறீங்க,ஒருக்கா செக் பண்ணுங்க ..இல்லேன்னா மறுபடியும் போஸ்ட் பண்ணுங்க..
  நன்றி ,அசௌகரியத்திற்கு வருந்துகிறேன்!

  ReplyDelete
 4. இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
  http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_24.html

  ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)