Monday, October 24, 2011

மீனம்மா,மீனம்மா - உன் கண்கள் மீனம்மா!

அழகிய வண்ணங்களில் ,ஆச்சர்யமான உருவ அமைப்பில்,கற்பனைக்கெட்டாத டிசைன்களில்-இருந்தது அந்த உலகத்தில் வாழும் உறுப்பினர்கள் ஒவ்வொன்றும். அவள் என் கைபிடித்து ,மெதுவாக நீந்திச் சென்று , ஒவ்வொன்றாக காண்பித்தாள்.

"இறைவா! உன் படைப்புத் திறனை மிஞ்ச ஆளே இல்லை.இது சத்தியம்!" என்று மனம் திரும்பத் திரும்ப அறுதியிட்டுக் கூறியது.

அவள் உற்சாகமாக,இன்னும் இன்னும் ஆழத்திற்கு என்னை இழுத்துக் கொண்டு போனாள்! ஐயோ, இவளின் ஆர்வம் ,இன்றோடு என் கதையை முடித்துவிடும் போல உள்ளதே, " முடியவில்லை ,மேலே போகலாம்!" என்று சைகையில் சொன்னேன். உடனே புரிந்து கொண்டு ,விரைவாக நீரின் மேல் பரப்பை நோக்கி கொண்டு சென்றாள். என்னை ஒரு பாறையின் மேல் இருத்தி,அவள் மட்டும் நீரின் உள்ளேயே நின்று கொண்டாள்.

"என்ன ஆச்சு?" என்றவளிடம், "அப்பா , என்னால மூச்ச அடக்க முடியல,மூச்சு முட்டி செத்து போய்ருப்பேன்,எனக்கு என்ன , உன்ன மாதிரி சிறப்பு உடல் அமைப்பா?" என்று பதில் கேள்வி கேட்டேன்.

"இவ்வளவு நேரம் ,உள்ளே நீந்தி, எனக்கு சோர்வாகவும் ,பசியாகவும் இருக்கே" என்றேன் அவளை பார்த்து. நான் அமர்ந்திருந்த பாறையை சுற்றி , கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் நீர். என் முக வாட்டத்தை புரிந்து கொண்ட அவள், "இதோ வருகிறேன்!" என்று , அழகிய டால்பின் போல் , துள்ளி தன் உடலை நீரினில் புகுத்தி மூழ்கினாள்.

சிறிது நேரத்தில் , 'சரக்' கென்று, நீரினை கிழித்து வெளியே வந்தவளின் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை. அவள் கைகளில், நான் அடிக்கடி தேடித் தேடி ,கடை கடையாக ஏறி , விரும்பி உண்ணும் 'மீன்கள்' , ஆனால் உயிருடன்.

"கொண்டுவந்ததெல்லாம் சரி, ஆனால் , பச்சையாத் தின்ன முடியாதே!" என்றவனைப் பார்த்து , குறும்புடன் கண் சிமிட்டினாள். பர பர வென, தன் கைகளைத் தேய்த்தவுடன், நான் உக்கார்ந்திருந்த பாறையின் அருகிலேயே "தீ"  வரவழைத்தாள் ஒரு தேர்ந்த மந்திர நிபுணனைப் போல். அதில் அந்த மீன்களை வாட்டி, சூடாக சுவைக்கக் கொடுத்தாள்.

வெறும் உப்பு நீரை மட்டும் கொண்டு சமைத்த அந்த மீன்கள் , தேனாய் தித்தித்தன.  ஒவ்வொருமுறையும் மிளகாய்ப் பொடியின் மேல் குறை சொல்லி, வேகாமலோ, ஓவராக வெந்தோ கிடைக்கும் மனைவியின் 'மீன் பிரை'  என் நினைவில் மின்னி மறைந்தது.

வயிற்றுக்கு சுவை கிட்டியதால், மனம் குளிர்ந்து ஆவலுடன் , பல கதைகள் பேசத் தொடங்கினேன். நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் வெளிச்சப் பந்தாக , என் கண் முன்னே , நீரினுள் மூழ்கும் ,அந்த அற்புதத்தை , கண் கொட்டாமல் பார்த்தேன். சட்டென்று நினைவு வந்தவனாக, "சரி நான் வீட்டுக்கு போற நேரமாச்சு" என்றேன் அவளிடம்.

உடன் முகம் வாடியவளின் கண்ணில் நீர்த் துளிகள். சமீபத்தில் பார்த்த , பல ஆங்கிலப் படங்களின் நினைவு வந்தவனாக, விரைந்து என் பாக்கெட்டில் இருந்து , ஒரு சிறிய கண்ணாடி குடிவையில் அந்த கண்ணீர் துளிகளை சேமித்தேன். என்ன ஆச்சர்யம் , அந்த துளிகள் , உருண்டு திரண்டு, இரண்டு மூன்று முத்துக்களாக மாறிகொண்டிருக்கும் போதே ,  யாரோ என் உடம்பை உலுக்குவது போல் உணர்ந்தேன். என் கை அந்த கண்ணாடி குடுவையை தவற விட, என் கண் முன்னே அது உருண்டு ஓடி,
நீரினுள் உடைந்து விழுந்து நீருடன் கலந்தது. என் நினைவிலிருந்து அந்த
'mermaid'-இன் உருவம் மெழுகாக கரைய ,கண் விழித்தால் ,எதிரே என் மனைவி.

"இது தான் நீங்க மீன் வாங்கப் போற லட்சணமா?
இந்நேரம் நல்ல மீனெல்லாம் வித்து முடிச்சிருக்கும். மீன் பிரை வேணும்னு வக்கணையா கேட்கத் தெரியுதுல்ல. போய் கால காலத்துல வாங்கிட்டு வராம, அப்படியே செத்த பொணம் மாதிரி 'bed' மேல கெடக்குரதப் பாரு. இப்படி ஒரு சோம்பேறி மாப்ளைய எங்கப்பன் எனக்கு கட்டி வச்சிட்டாரே எங்கப்பா" என்று கூச்சலிட்டாள் கோபாலின் மனைவி.

"ச்சே எல்லாம் கனவா! பிள்ளைக்கு இன்னைக்கு mermaid கதை சொல்லலாம்னு படிசிகிட்டே அப்பிடியே தூங்கிட்டேன் போல"  என்றாவறே, அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு , பைக்கை வீட்டை விட்டு வெளியேற்றினான் கோபால்.2 comments:

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)