Saturday, October 29, 2011

நான் போட்ட சவால்!

அந்த கிளினிக்-ல் நுழைந்தவுடன்,ரிசப்சனிஸ்ட் அடையாள அட்டையை வாங்கி , கம்ப்யுடரில் விவரங்களை சரி பார்த்து விட்டு, ஒரு வரிசை எண்ணை வழங்கினாள். 

"மணி அங்க உக்காரு" என்று வந்தது கட்டளை. சொன்ன இடத்தில நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொண்டு, வேற யாராவது தெரிந்தவர்கள் வந்திருகிரார்களா என்று பார்க்கத் தொடங்கினேன். யாரும் தெரிந்த மாதிரி இல்லை.  பக்கத்தில் ஒருவன் உடல் முழுவதும் நடுக்கத்துடன் உக்கார்ந்து கொண்டிருந்தான். 'பய  ஓவராக நடுங்கிரானே, மொதல் தடவையா வர்றானோ' என்று நினைத்துக் கொண்டே,என்ன ஆச்சு என்றேன்.

"மணி , உஷ் , இது ஹாஸ்பிடல் , இங்கே இப்படி சத்தம் போட்டு பேசக் கூடாது "
என்று அதட்டல் வந்தது. நான் அதனை கண்டு கொள்ளாமல்,அந்த புதியவனை பார்த்து,
"என்ன ஆச்சு?" என்றேன்.
"ரெண்டு நாளா ஒரே காச்சல்" என்றான். 
 "ஒன்னும் பயப்டாத, உள்ள போனவுன்னே ,உன் வாயத் தெறக்கச் சொல்லி , செக் பண்ணிட்டு , என்னத்தையோ ஊட்டி விடுவாங்க,மொதல்ல கசகுற மாதிரியே இருக்கும், அப்புறம் நல்லா இனிக்கும் ,அப்புறம் நாக்க சாப்பிட்டு சாப்பிடலாம் ...ஹ்ம்ம் செம டேஸ்டு".
அவன் ஒன்றும் சொல்லாமல் இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தான். 

நான் கண்ணாடிக் கதவின் வெளியே பார்க்க, காரில் இருந்து இறங்கினான் ராஜா. எப்பவும் துள்ளல் நடையுடன் வருபவன் , ஏனோ அன்று , கொஞ்சம் நடக்க முடியாமல் நடந்து வந்து , என்னருகே அமர்ந்தான்.

"என்னடா ராஜா ஆச்சு?"
"அத ஏண்டா கேட்குற ? என்றான் ராஜா சோகத்துடன்.
"சொல்லு " என்றேன்.
"ஒன்னும் இல்லடா , நேத்து புதுசா ஒரு Cafe கு கூப்பிட்டு போனாயிங்க. அங்க வித விதமா , கேக் அது இதுன்னு இருந்துச்சு...புதுசா Strawberry Muffin இருந்தச்சு...
எனக்கு தான் Strawberry ரொம்ப புடிக்குமே ..ஆசையா நாலஞ்சு சாப்டுட்டேன்...
பாவி பயலுக என்னத்த போட்டாங்களோ ,  வீட்டுக்கு போனதில் இருந்து , ஒரே வயித்து வலி, இப்பவரைக்கும் தீந்த பாடில்ல"  
"சரி ,கவலைப் படாதே ,இந்த டாக்டர் உன் கவலையைப் போக்கிருவாறு "
என்றேன் சிரிப்பை அடக்கி கொண்டே.

எதேச்சையாக வெளியே வாசலை பார்க்க , புதிதாக இருவர் ...ரெண்டு பேரும் ஒரே மாதிரி , ஹேர் ஸ்டைல் , உடல் அமைப்பு ,கலர் ...ஒருவன் மட்டும் கண்ணாடி கதவை திறந்தவுடன் உள்ளே வந்து விட்டான் தைரியமாய், இன்னொருவன் , நான் உள்ள வரமாட்டேன் என்று காலை தரையில் ஊன்றிக் கொண்டு கதவின் வெளிப்புறம் நின்று கொண்டு , எவ்வளவு இழுத்துப் பார்த்தும் வராமல் முரண்டு பிடித்தான். நான் முதல் முதலில் இந்த கிளினிக் வந்த போதும் இதே மாதிரி நடந்து கொண்டதை எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

"டோக்கன் நம்பர் 17" என்று காட்டியது மேலே இருந்த அந்த டிஸ்ப்ளே.
"மணி வா ,உள்ள போகலாம்"

உள்ளே போனவுடன் , "என்னாச்சு மணிக்கு?" என்றார் டாக்டர் . 
"எப்பப் பாத்தாலும் அரிச்சிகிட்டே இருக்கான் டாக்டர்,கண்ட இடத்துல விழுந்து புரள்றது,எது சொன்னாலும் கேட்குறதே இல்ல,வால் ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சி"
"அப்படியா ,என்ன மணி ,வால கட் பண்ணிரட்டுமா?" என்றார் டாக்டர் என்னைப் பார்த்து.
"அய்யா ..சாமி ...அப்பிடி எதுவும் செஞ்சி என் மானத்த வாங்கிடாதீங்க" என்று நினைத்துக் கொண்டே, அமைதியாக அவரப் பார்த்தேன்.
என்ன முடியை விலக்கி நன்றாக செக் செய்தவர் , நெறைய பூச்சி வந்தருக்கு,
வேற வழியில்ல , முடியெல்லாம் ரீமூவ் பண்ணனும் , என்று சொல்லிவிட்டு , என் கழுத்தில் ஒரு வட்ட பிளாஸ்டிக்கை மாட்டிவிட்டு அடுத்த அறைக்கு 
அனுப்பி விட்டார்.

அங்கே கன ஜோராக ,எனக்கு உடம்பெல்லாம் ஒரு முடி விடாமல் சிரைத்து விட்டார்கள். நான் இப்போது முழுசா உரிச்ச கோழியாட்டம் இருந்தேன். 

உடல் நடுங்கியவாறு வெளியே வந்த என்னைப் பார்த்து ,விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான் அந்த 'காய்ச்சல்' பார்ட்டி.அவனுடன் என் நண்பன் ராஜாவும் , மற்றவர்களும் சேர்ந்து கொள்ள , ஒரே அவமானம்,

"இனிமே இந்த Pets Clinic பக்கம் வரவே கூடாது , வானமே இடிஞ்சி விழுந்தாலும்" என்று சபதம் செய்து கொண்டே, என் எஜமானருடன் நடக்கத் தொடங்கினேன்.

டிஸ்கி:  சமீபத்தில் பத்திரிகையில் படித்த செய்தி, நாய்களுக்கு வழக்கமாக கொடுக்கும் Pet Food அவளவு ஹெல்தியாக இல்லையென்று நாய் வைத்திருக்கும் ஓனர்கள் ரொம்பவே கவலைப் பட்டதால் , ஆர்கானிக் மற்றும் ஹோம் மேட் டின்னர் உணவுகள் செய்யும் பிசினஸ் சக்கப் போடு போட ஆரம்பித்து விட்டதாம்.  நாய்களுகென்று பிரத்யோக பேக்கரிகள் கூட திறக்கப் பட்டுவிடனவாம். நாய்களை கவனித்துக் கொள்ள Day Care சென்டர்கள் கூட உள்ளது உங்களுக்குத் தெரியுமா,பாவம் நம்ம ஊர் தெரு நாய்கள்...

இந்த சுட்டிகளை பாருங்கள், சிங்கையில் நாய்களுக்கென்றே உருவான வர்த்தகத் தளங்களின் விவரங்கள், அங்கே கிடைக்கும் கேக் விபரங்கள் உள்ளன:2 comments:

  1. கதை நன்றாக இருந்தது. கடைசி வரை சஸ்பென்ஸ் இருக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் புரிந்து விட்டது இது கால் நடை மருத்துவமனையாக் இருக்குமென்று...

    ReplyDelete
  2. நன்றி நண்பரே!

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)