Saturday, November 5, 2011

என்னை ஏதோ செய்கிறாள் - கிரைம் தொடர் - பாகம் 1

துபாயிலிரிந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் இன்னும் சிறிது நேரத்தில் தரையை அடையும் ஆயத்தத்தில் இருந்தது. அதில் இருந்த கண்ணனின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது , இரண்டு வருடங்களுக்கு பிறகு தன் மனைவியை பார்க்கப் போவதால். திருமணம் ஆகி இரண்டு வாரங்களிலேயே வேலைக்கு திரும்பியதால் பிரிவுத்துயரில் வாடிய அவன் வருத்தத்திற்கு தீர்வு இன்று கிடைக்கப் போகிறதே.

விமான நிலைய குடியுரிமை செக்கிங் எல்லாம் முடித்துவிட்டு, பல பரிசுப் பொருட்கள் அடங்கிய தன் பெட்டிக்காக காத்திருந்து அவசரமாக அதனை எடுத்துக்கொண்டு ,வேகமாக கிரீன் சானெல் வழியாக வெளியேறினான்.
வெளியே தன்னை மொய்த்த பல கண்களை தயக்கத்துடன் பார்த்து, தன் மனைவி தெரிகிறாளா என்று கண்களால் தேடினான்.

 தூரத்தில் கை அசைத்த மனைவியை பார்த்து கிட்டத்தட்ட ஓடும் வேகத்தில் தன் டிராலியை தள்ளிக் கொண்டே நடந்தான். தன் உறவினருடன் வந்திருந்த மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டே ,அவள் உறவினரின் நலம் விசாரித்து ,மனைவி கொண்டுவந்திருந்த வாடகைக் காரில் ஏறி அவள் அருகில் உட்கார்ந்தான். மனைவியின் முகத்தை வெகு நாட்களுக்குப் பிறகு  பார்த்தவனுக்கு,அதில் உற்சாகமே இல்லாதது ஆச்சர்யத்தை அளித்தது.

சொந்த ஊரை நோக்கி விரைந்த சாலையில் இருபுறமும் இருந்த பசுமையையும்,வெகு நாட்களாக மிஸ் செய்த அந்த ஈரம் கலந்த மண் வாசனையும் அவன் உற்சாகத்தை அதிகப்படுத்தின. வீட்டை அடைந்து ,காத்திருந்த சொந்தங்களுடன் பேசி அனுப்பிவிட்டு, கிடைத்த சிறு இடைவெளியில்,மனைவியை ஆசையுடன் கட்டிப் பிடித்தான். "என்னங்க இது விடுங்க, மொதல்ல பல்லு விளக்கி ,குளிச்சிட்டு வாங்க" என்று தள்ளிய மனைவியை பார்த்து திகைத்த அவன், "ரொம்ப நாருதோ" என்று வாயை ஊதிப் பார்த்தவாறே குளிக்கப் போனான்.

"சஞ்சு,எங்க போயிட்ட" என்றவாறே குளித்துவிட்டு வெளியே வந்த கண்ணன்,
 சமையல் அறையில் ஒரு வித வாடை வர ,என்னவென்று பார்க்க உள்ளே சென்றவன்  அதிர்ச்சியில்  உறைந்தான்.

அங்கே அடுப்பில் பால் பொங்கி வழிந்து கொண்டு அடுப்பை அணைக்க போராடிக் கொண்டிருந்தது. "இத கூட கவனிக்காம எங்க போயிட்டா?" என்று சிறிதாக எழுந்த கடுப்பை அடக்கிக் கொண்டே அதை அணைத்து விட்டு, வெளியில் வந்தவனுக்கு ,படுக்கை அறையில் இருந்து வந்த வித்யாசமான சத்தம்  அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது.

அங்கே விரைந்து எட்டிப் பார்த்தவனுக்கு,அங்கே கண்ட காட்சி அவன்  இதயத்தை வேகமாக துடிக்கச் செய்தது. அவன் மனைவி சஞ்சனா , தூக்கில் தொங்கி ,காலை உதைத்து கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.  கண்ணன் ஓடிப் போய் காலை பிடிக்கவும் அது ஒரு உதறலுடன் நிற்கவும் சரியாக இருந்தது.

அதற்குப் பிறகு அவன் அலறியதும்,பக்கத்து வீட்டினர் வந்து உதவியதும் எந்த வித பயனுமில்லாமல் சஞ்சனா அநியாயமாக உயிரை விட்டிருந்தாள்.
போலீஸ் வந்து ஆக வேண்டிய காரியங்களை அறிவுறுத்தி ,அவள் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

வெளியில் விசாரித்த வரை கண்ணன் மீது எந்த ஐயமும் கொள்ள வேண்டிய வகையான ஆள் இல்லை என்பது போலீஸ் விசாரித்த அளவில்  தெளிவானதால்,மனிதாபிமான அடிப்படையில் ஆக வேண்டிய காரியங்களை செய்துவிட்டு வா என்று அவனை அனுப்பி வைத்தார்கள் போலீஸ்.

கண்ணன் மூன்று வாரங்களுக்குப் பிறகு தானாகவே ஸ்டேஷன் வந்து ,இன்ஸ்பெக்டர் ஐயாவை பார்க்க வேண்டும் என்று கான்ஸ்டபிளிடம் சொன்னான். இன்ஸ்பெக்டர் கணேஷ் அவனை உள்ளே அழைத்து உட்காரச் சொல்லி,
 "சொல்லுங்க கண்ணன் " என்றார்.
"சார், என் மனைவி எழுதிய கடிதம் ஒன்று இன்று  தான் என் கைக்கு வந்து சேர்ந்தது,உங்கள்ட்ட குடுக்கலாமுன்னு வந்தேன்".

வேகமாக அந்த கடிதத்தை வாங்கிப் பார்த்தவர் ,அதில் இருந்த வாக்கியங்களை கண்டு குழப்பமடைந்தார். அதில் இருந்தது:

   உரன்நசை இ உள்ளம் துணையாகச் சென்றார்

   வரல்நசை இ இன்னும் உளேன்.   க்ளூ :  மு.வ

"ஹ்ம்ம் என்னடா இது, ஏதோ திருக்குறள் மாதிரி இருக்கே , ஆனா புரியலையே ,பள்ளிக் கூடத்துல படிச்சதோட சரி ,அப்பப்ப சில பேமஸ் குறள்கள் படிச்சதோட சரி, இது மாதிரி பார்த்த ,படிச்ச ஞாபகமே இல்லையே ,யார்ட்டயாவது கேட்கணுமே " என்று இன்ஸ்பெக்டர் கணேஷ் யோசிக்க ஆரம்பித்தார். கடிதம் யாரிடம் இருந்து என்று பார்க்க அதில்   From அட்ரெஸ் எதுவும் இல்லை.

            ---௦௦௦௦௦**௦௦௦௦௦௦----

ஒரு வழியாக ,அந்த ஊரில் இருந்த ஒரே  தமிழ் ஆசிரியரைப் பார்த்து கேட்கலாம் என்று போனால் அவர் வெளியூருக்கு போய் இருப்பதை கண்டு
ஏமாற்றம் அடைந்து ஸ்டேஷன் திரும்பினார்  இன்ஸ்பெக்டர் கணேஷ்.

இன்ஸ்பெக்டர் கணேஷிடம் வந்து "சார்" என்று சல்யூட் அடித்த கான்ஸ்டபிளை பார்த்து ,
 "வாயா ராம், கல்யாணம்  முடிஞ்சி ,ரெண்டு வாரம் லீவு கூட முடிஞ்சாச்சு எங்க ஆளக் காணோமின்னு பாத்தேன்,நெறைய பெண்டிங் கேசுங்க கெடக்கு"
"சாரி சார் , வீட்ல கொஞ்சம் விருந்தாளி வந்திருந்தாங்க அதான் லேட்" என்று சொல்லிய அவரின் உதவியாளன் கான்ஸ்டபில் ராமின் புதிய செல் போன்  அப்போது தான் அலற ஆரம்பித்தது. அவன் அவசரமாக அதனை வெளியில் எடுத்து வந்த அழைப்பை  ரிஜெக்ட் செய்தான்.

"என்னையா புது போனா ,எங்க கொடு பாப்போம்" என்று அதனை வாங்கிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் கணேஷ்.

"ஆமாம் சார் என் பிரதர் இன் லா அமெரிக்காவுல இருக்காரு அவர் கொடுத்தது" என்று ராம் சொல்லிக் கொண்டிருக்க,
"என்னய்யா பட்டன் இல்லையே" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் கணேஷ்.
"சார் இது டச் ஸ்க்ரீன் " என்று அவருக்கு விளக்கினான் ராம்.
"ஓ,இது தான் அந்த போனா, என் பொண்டாட்டி கூட கேட்டுகிண்டுருந்தா" என்று அதனை தடவி பார்க்க ஆரம்பித்தார். அப்போது அவர் கண்ணில் பட்டது , ஒரு திருவள்ளுவர் படம் அதன் கீழே திருக்குறள் என்றிருக்க , அதை காமிச்சு என்னையா இது " என்று ராமிடம் காண்பித்தார்.

"சார் தெரியலையே" என்று அதனை வாங்கி பார்த்து அந்த படத்தை கிளிக்கியவுடன் , திருக்குறள் அதிகாரங்களின் தலைப்பு தெரிய , அதனை செலக்ட் செய்ய ," சார் திருக்குறள் காமிக்குது சார்" என்றான் ராம்.

"குடுயா அத" என்று வாங்கிப் பார்த்த கணேஷ் , விரைவாக அவனிடம் கண்ணன் கொடுத்த கடிதத்தில் இருந்த குறளைக் கொடுத்து ,என்ன மீனிங் போட்ருக்கு பாருயா என்று ஆணை இட்டார்.

எல்லா குறள்களையும் ஒவ்வொன்றாக பார்த்து வந்த ராம், சார் இதோ இருக்கு சார் என்று அவரிடம் போனை காட்டினான்.  அதில் மூன்று விளக்கங்கள், மு.வரதராசர் , கலைஞர் , சாலமன் பாப்பையா என்று மூன்று பேரிடம் இருந்து வந்தது போடப் பட்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் மகிழ்ச்சியுடன் மு.வ விளக்கத்தை பார்க்க,

வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு

வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே
இன்னும்யானும் உயிரோடு இருக்கின்றேன்.--தொடரும் ...

டிஸ்கி : சிறு கதையாக எழுத நினைத்தேன் , ஆனால் நீளமாக போய்க் கொண்டிருப்பதால் தொடராக்க முடிவு செய்து விட்டேன். பிடித்திருந்தால் அடுத்து வரும் பகுதிகளையும் படிக்கவும்.


3 comments:

 1. முதல் பகுதியே அருமையாக இருக்கு... அடுத்த பதிவுக்கு வெய்டிங்..

  ReplyDelete
 2. @Mohamed Faaique

  ரொம்ப நன்றி நண்பரே!

  ReplyDelete
 3. திருக்குறளுக்குள் மர்மம் வைக்கிறீர்களே... இரண்டு பாகம் படிக்க நெஞ்சு திக் திக் என்கிறது.

  ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)